மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்

Report Print Kumar in அரசியல்

ஒரு பொறிமுறையின் கீழ் மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஜனாதிபதி மற்றும் பிரதமர் மேற்கொள்ள வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு, திசவீரசிங்கம் சதுக்கத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டு ஒரு வருடமும் நான்கு மாதங்களும் கடந்துள்ள நிலையில் கூட மாகாணசபை தேர்தல் தொடர்பான சரியான முடிவினை இன்னும் வெளியிடவில்லை.

தேர்தல் திணைக்களம் இது தொடர்பில் அக்கறை காட்டினாலும் கூட அரசாங்கம் எந்த அக்கறையும் எடுக்கவில்லை.

அண்மையில் தேர்தல் திணைக்கள ஆணையாளர் மாகாணசபை தேர்தல்கள் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான அழுத்தங்களை நடாளுமன்ற உறுப்பினர்கள் வழங்க வேண்டும் என வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

மாகாணசபையின் தலை விதி தற்போது நாடாளுமன்றத்தில் உள்ளது என்ற நிலையே தற்போது காணப்படுகின்றது.

கிழக்கு மாகாணசபை கலைக்கப்படவிருந்த காலப்பகுதியில் 20ஆவது திருத்தசட்டம் மூலம் ஊடாக கிழக்கு மாகாணசபையின் ஆட்சிக் காலத்தினை ஒரு வருடத்திற்கு நீடிப்பது தொடர்பில் ஆராயப்பட்டபோது அது மக்கள் ஆணையை மீறும் செயற்படா என்பது தொடர்பிலும் ஆராயப்பட்டது.

எனினும், அந்த 20ஆவது திருத்தத்தில் இன்னும் திருத்தங்களை செய்து குறிப்பட்ட காலத்திற்குள் மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கான வாய்ப்புகள் இருந்ததன் காரணமாக 37 உறுப்பினர்களை கொண்டு ஆளப்படும் மாகாணத்தினை தனி ஆளுநரின் கைகளில் வழங்குவது என்பது மக்களின் அதிகாரங்களை எல்லாம் ஒருவரிடம் வழங்கும் செயற்பாடாக அமையும் என்பதனால் கிழக்கு மாகாணசபையில் 20ஆவது திருத்த சட்டத்தினை ஆதரித்தோம்.

ஆனால் வட மாகாணசபை துரதிர்ஷ்டவசமாக அதனை ஆதரிக்கவில்லை. எனினும் வடமாகாணசபை கலைய இருந்த சந்தர்ப்பத்தில் வடமாகாண முதலமைச்சர் நாங்கள் 20ஆவது திருத்தத்தில் கூறியதை கூறி கால நீடிப்பு செய்யவேண்டும் என்று கூறினார். ஆனால் அது பிந்திய சிந்தனையாக மாறிவிட்டது.

தேர்தல் நடைபெறமுடியாத ஒரு சூழ்நிலையிருக்கின்ற வேளையில் மக்களுடைய ஆணையினை பெற்ற உறுப்பினர்களை தெருவில் விடுகின்ற ஒரு நிலைமையாக இந்த செயற்பாடு இருந்தது என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

புதிய சட்டத்தின் மூலம் தேர்தல் நடைபெறவேண்டுமானால் எல்லை நிர்ணய அறிக்கை நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட வேண்டும். ஆனால் எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் அதிருப்தி இருப்பதன் காரணமாக அந்த திருத்தத்தினை உடனடியாக கொண்டு வரமுடியாத நிலையுள்ளது.

பழைய முறையின் அடிப்படையில் மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு அநேகமானவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான அறிக்கையொன்றை வழங்கும் வகையில் பிரதமர் தலைமையிலான குழுவொன்று அமைக்கப்பட்டு ஆராயப்பட்டு வருகின்றது.

பழைய முறைக்கு செல்வதென்றாலும் சட்டமூலம் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டு சட்டமாக்கப்பட வேண்டும்.

பார்க்கப்போனால் மாகாணசபை தேர்தல் நடத்தப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் தள்ளிச் சென்று கொண்டிருக்கும் நிலையே காணப்படுகின்றது.

இது ஜனநாயகத்தினை கேள்விக்குறியாக்கும் நிலையாகும். எனவே ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் ஒரு பொறிமுறையினை கையாண்டு மாகாணசபை தேர்தல்களை நடத்துவதற்கு முன்வர வேண்டும் என கோரியுள்ளார்.

Latest Offers