2019ஆம் ஆண்டு மொத்த அரச செலவு 4,470 பில்லியன் ரூபாய்

Report Print Steephen Steephen in அரசியல்

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தாக்கல் செய்த 2019ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதனடிப்படையில், 2019ஆம் ஆண்டு அரசாங்கத்தின் மொத்த செலவுகள் 4470 பில்லியன் ரூபாய் என நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த தேசிய வருமானத்தில் துண்டு விழும் தொகை 4.8 வீதம் எனவும் அமைச்சு கூறியுள்ளது.

2014ஆம் ஆண்டு மொத்த தேசிய வருமானம் 11.5 வீதமாக இருந்ததுடன் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், அரச வருமானம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டதுடன் 2019ஆம் ஆண்டில் மொத்த தேசிய வருமானம் 15 வீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்ககப்படுகிறது

2019ஆம் ஆண்டு அரச கடனை செலுத்த 2200 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகையானது இலங்கை வரலாற்றில் கடனை செலுத்த அரசாங்கம் ஒதுக்கும் மிகப் பெரிய தொகையாகும்.

மேலும் அரசத்துறை சேவைகளின் செலவுகளுக்காக 1425 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மூலதன செலவுகளுக்காக 838 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் அடுத்த மாதம் 5ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதுடன் நிதியமைச்சர் மங்கள சமரவீர மார்ச் மாதம் 5ஆம் திகதி வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்ய உள்ளார்.

2021ஆம் ஆண்டில் அரச வருமானத்தை 17 வீதமாக அதிகரிக்கவும், அரச செலவுகளை 15 வீதத்திற்கு மட்டுப்படுத்தவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.