பண்டாரநாயக்கவின் பெயரை விற்று சாப்பிடும் திருடர்களும் கொலைகாரர்களும்!

Report Print Steephen Steephen in அரசியல்

பண்டாரநாயக்கவின் பெயர் மற்றும் கொள்கைகளை விற்று சாப்பிட்ட திருடர்களும் கொலைகாரர்களும் இந்த நாட்டில் இன்னும் இருப்பதாகவும் அவர்கள் தற்போதும் பண்டாரநாயக்கவின் பெயரையும் கொள்கைகளையும் விற்று சாப்பிட்டு வருகின்றனர் எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகரும் முன்னாள் பிரதமரும், தனது தந்தையாருமான எஸ்.டப்ளியூ.ஆர்.டி பண்டாரநாயக்கவின் 120 ஜனன தின நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கலந்துகொண்டுள்ளார்.

நிகழ்வின் இறுதியில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே இதனை கூறியுள்ளார். பண்டாரநாயக்கவின் ஜனன தினத்தில் கூற வேண்டிய பல விடயங்கள் உள்ளன. ஆனால், அதற்கு இது பொருத்தமான நேரமல்ல. பண்டாரநாயக்கவின் உண்மையான கொள்கைகள் எங்களிடமே இருக்கின்றது எனவும் சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் அமைந்துள்ள பண்டாரநாயக்கவின் உருவச்சிலைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன மலரஞ்சலி செலுத்தினார்.

மைத்திரிபால சிறிசேன மலரஞ்சலி செலுத்தி விட்டு அங்கிருந்து புறப்படும் போது, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அங்கு வந்தார். எனினும் இருவரும் பேசிக்கொள்ளாது புறப்பட்டுச் சென்றனர்.

புதிய லக்கல நகரை திறந்து வைக்கும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புறப்பட்டுச் சென்றார்.

அதேவேளை கடந்த காலங்களில் நாடாளுமன்றத்திலும் அரசியல் களத்தில் மட்டுமல்லாது, நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்திலும் கலந்து கொள்ளாத கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க இன்றைய நிகழ்வில் கலந்துகொண்டார்.

இவரைத் தவிர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர, கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச, கட்சியின் சிரேஷ்ட பிரதிநிதிகள் மற்றும் பண்டாரநாயக்க குடும்ப உறவினர்கள் உட்பட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

Latest Offers