20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் ரணிலுக்குக் கிடைக்கும் வரப்பிரசாதங்கள்!

Report Print Gokulan Gokulan in அரசியல்

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை குறைக்கும் போர்வையில் அவற்றை நாடாளுமன்றத்திற்கு வழங்குவதாகக் கூறிக்கொண்டு, நிறைவேற்று அதிகாரத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்குவதே 20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டு வருவதன் பிரதான நோக்கமாகும் என வியத்மக அமைப்பைச் சேர்ந்த சட்டத்தரணி கல்யாணந்த திலகம தெரிவித்துள்ளார்.

வியத்மக அமைப்பினால் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

இருபதாவது அரசியலமைப்பு திருத்தத்தை ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களைக் குறைப்பதற்காகக் கொண்டுவரவில்லை.

அத்தோடு நாட்டைப் பிரிக்கும் புதிய அரசியலமைப்பின் நோக்கங்களை 20ஆவது திருத்தத்தின் மூலம் அடைந்து கொள்ள முடியும் என்பதாலேயே அதற்கு சுமந்திரன் ஆதரவளிக்கின்றார்.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் சர்வசன வாக்கெடுப்பினை நடத்தலாம் என மக்கள் விடுதலை முன்னணியினர் கூறுகின்றனர்.

அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரிக்கின்றது. சர்வசன வாக்கெடுப்பில் எத்தகைய பெறுபேறு பெறப்படினும் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வெற்றியாகவே அமையும்.

புதிய அரசியலமைப்பை ஆதரித்து பெரும்பான்மையான மக்கள் வாக்களிப்பார்களாயின் நாட்டைப் பிரிக்கும் அரசியலமைப்பை நிறைவேற்றும் பணிகளை முன்னெடுப்பார்கள்.

புதிய அரசியலமைப்பிற்கு எதிராக பெரும்பான்மையினர் வாக்களிப்பார்களாயின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத் தமிழ் மக்களின் வாக்குகளை ஒன்றிணைத்து, அவர்கள் சிங்கள ஆட்சியாளரை விரும்பவில்லை எனக் கூறி, புதிய ஆட்சி அதிகாரத்தினைக் கோருவார்கள்.

இத்தகைய நாட்டைப் பிரிக்கும் செயற்பாடுகளுக்கு எதிராக விழிப்புணர்வுடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.