முன்னாள் ஜனாதிபதிக்கு புலம்பெயர் தமிழர்கள் கொடுத்த பணம்: விமலின் புதிய கண்டுபிடிப்பு

Report Print Steephen Steephen in அரசியல்

சமஷ்டி அரசியலமைப்புச்சட்டத்தை நிறைவேற்ற புலம்பெயர் தமிழர்கள், முன்னாள் பெண் ஜனாதிபதி ஒருவருக்கு பணத்தை வழங்கியுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமைகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

கொண்டு வரப்பட உள்ள புதிய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு இந்தியாவின் மாநில அரசாங்கத்திற்கு அதிகமான அதிகாரங்கள் கிடைக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூட்டங்களில் கூறி வருகிறார்.

இரண்டு மாகாணங்களின் வாழும் மக்களின் விருப்பத்திற்கு அமைய அவற்றை ஒன்றாக இணைக்க முடியும் எனவும் மாகாண சபைக்கு மத்திய அரசாங்கம் அழுத்தங்களை கொடுக்க முடியாது எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதனை நாங்கள் கூறவில்லை. ரணில் விக்ரமசிங்கவின் பிரதான மீட்பரான எம்.ஏ.சுமந்திரனே இதனை கூறியுள்ளார். இந்த கதையை சிந்தித்துப் பாருங்கள். வடக்கு, கிழக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டு வரும் நிலையில், வடக்கு, கிழக்கை இணைத்தால் என்ன நடக்கும்.

அந்த மாகாணத்திற்கு முழுமையான அதிகாரங்களை வழங்கினால் என்ன நடக்கலாம். மத்திய அரசாங்கத்தின் கைகளை கைவிட்டு, மாகாண அரசாங்கத்திற்கு சுதந்திரத்தை வழங்கினால், வடக்கு, கிழக்கில் எந்த இராணுவ முகாமும் இல்லாத சந்தர்ப்பத்தில் ஏற்படும் அவசர நிலைமையை எப்படி எதிர்கொள்ள முடியும்?.

அது மாத்திரமல்ல எமக்கு தெரியும் சில மேற்குலக நாடுகள் இலங்கையில் சமஷ்டி ஆட்சியை ஏற்படுத்த அதிக அக்கறை காட்டி வருகின்றன. அமெரிக்கா திருகோணமலை தனது இராணுவ களமாக மாற்ற வடக்கு, கிழக்கில் பலமான பிராந்திய அரசாங்கம் இருக்க வேண்டியது முக்கியம். அதேபோல் காணி அதிகாரங்கள் அந்த பிராந்திய அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டியதும் அமெரிக்காவுக்கு முக்கியம். எந்த அளவு காணி அமெரிக்க இராணுவ முகாமுக்கு வழங்கப்படும் என தீர்மானம் எடுக்கும் அதிகாரம் பிராந்திய அரசாங்கத்திற்கு இருப்பதும் அமெரிக்காவுக்கு முக்கியமானது.

பலவீனமான மத்திய அரசாங்கம் ஒன்றை உருவாக்கி, வடக்கு, கிழக்கில் பலமிக்க பிராந்திய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தினால், இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடும் சந்தர்ப்பம் மேற்குலக சக்திகளுக்கு கிடைக்கும். இதன் காரணமாக இலங்கையில் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை நிறைவேற்ற முயற்சித்து வருகின்றனர்.

ஆயிரக்கணக்கான படையினர் உயிர்களை தியாகம் செய்து, நிறுத்திய ஈழம் கனவை நாடாளுமன்றத்தின் கொண்டு வரப்படும் சமஷ்டி அரசியலமைப்பின் மூலம் நனவாக மாற்ற சுமந்திரன்களின் முயற்சியை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும்.

எமக்கு தெரிந்த வகையில், புலம்பெயர் தமிழர்கள் முன்னாள் பெண் ஜனாதிபதிக்கு பெருந்தொகை பணத்தை வழங்கியுள்ளனர். இந்த சமஷ்டி அரசியலமைப்புச் சட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையின் கீழ் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தமது பக்கம் இழுக்க முயற்சித்து வருகிறார் எனவும் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.