லசந்த கொலையுடன் கோத்தபாயவுக்கு தொடர்புள்ளது

Report Print Steephen Steephen in அரசியல்

சன்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்த சம்பவத்துடன் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கே நேரடியான தொடர்பு இருப்பதாக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

லசந்த விக்ரமதுங்க கொல்லப்பட்டு இன்றுடன் 10 ஆண்டு நிறைவு பெற்றுள்ளதுடன் அவரது 10 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பொரள்ளை கனத்தை மயானத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்வில் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே ரஞ்சன் ராமநாயக்க இதனை கூறியுள்ளார்.

லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் பொறுப்புக் கூற வேண்டும் என்பதை நாட்டு மக்களின் பெரும்பான்மையானோர் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

லசந்த விக்ரமதுங்க, கோத்தபாய ராஜபக்சவை விமர்சித்து வந்தவர். அத்துடன் சர்வதேச ஊடகம் ஒன்று லசந்தவின் கொலை தொடர்பாக கோத்தபாயவிடம் கேள்வி எழுப்பிய போது யார் லசந்த என்ற அலட்சிய போக்கில் பதிலளித்தார்.

மிக் விமான கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான செய்திகளை வெளியிட்டதால், லசந்த விக்ரமதுங்கவிடம் இழப்பீடு கோரி கோத்தபாய ராஜபக்ச வழக்கொன்றையும் தொடர்ந்திருந்தார் எனவும் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.