மகிந்தவிற்கு எதிராக மீண்டும் போர்க்கொடி தூக்கும் கூட்டமைப்பு!

Report Print Murali Murali in அரசியல்

மகிந்த ராஜபக்ச எவ்வாறு எதிர்க்கட்சி தலைவராக செயற்பட முடியும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேள்வியெழுப்பியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பிலான தமது தீர்மானத்தில் மாற்றமில்லை என சபாநாயகர் மீண்டும் நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பதிவில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது,

“ஜனாதிபதி அரச தலைவராகவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் செயற்படுகின்றார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் என கூறப்படும் மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித்தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒரே சந்தர்ப்பத்தில் அரச தலைவராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் எவ்வாறு செயற்பட முடியும் என நாடாளுமன்றம் ஜனாதிபதியிடம் வினவ வேண்டும்” என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில், “சபாநாயகரின் தீர்மானமே செல்லுபடியாகும் எனவும் நீதிமன்றத்தை இதனுடன் தொடர்புபடுத்த முடியாது” எனவும் குறிப்பிட்டார்.