வடக்கின் புதிய ஆளுநருக்கு சம்பந்தன் அறிவுரை!

Report Print Rakesh in அரசியல்

மக்களின் தேவையறிந்து அவர்களின் மனதை வெல்லும் வகையில் திறம்படப் பணியாற்றுங்கள் என வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமனம் பெற்ற சுரேன் ராகவனிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனுக்கும் இரா. சம்பந்தனுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது தாம் இவ்வாறு கூறினேன் என இரா.சம்பந்தன் இன்று தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது,

அதிகாரத்தின் பக்கம் மட்டும் நிற்க வேண்டாம். மக்களின் தேவையறிந்து அவர்களின் மனதை வெல்லும் வகையில் திறம்படப் பணியாற்றுங்கள். போரால் வடக்கு மாகாணமும் அங்குள்ள மக்களும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளமையைக் கவனத்தில் கொண்டு கடமையாற்றுங்கள் என கூறினேன்.

இந்தச் சந்திப்பு திருப்திகரமாக இருந்தது. வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை உத்தியோகபூர்வமாகக் கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ள நிலையில் என்னை வீடு தேடி வந்து சந்தித்தமை எமக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

இந்தச் சந்திப்பின்போது வடக்கு மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் தொடர்பில் பேசினோம். காணி, கல்வி, தொழில், அபிவிருத்தி விடயங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தினோம் என அவர் தெரிவித்துள்ளார்.