நாடாளுமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கோரிய மஹிந்தவின் சகா

Report Print Gokulan Gokulan in அரசியல்

சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்தமை தவறான விடயம் எனவும் அதற்காக மன்னிப்பு கேட்பதாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போது ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலளிக்கையிலேயே அருந்திக்க பெர்னாண்டோ இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த நவம்பர் மாதம் 16ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமைதியற்ற நிலைமையின் போது தான் சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்தமை தொடர்பில் மன்னிப்பு கேட்பதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தான் அந்த செயற்பாட்டை நினைத்து வேண்டுமென்றே செய்ய வில்லை என தெரிவித்த அவர் தான் சபாநாயகர் ஆசனத்தில் அமரும் வேளையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பித்திருக்கவில்லை எனவும் செங்கோல் கொண்டுவரப்பட்டிருக்கவில்லை.

எவ்வாராயினும் குறித்த செயற்பாடு பிழையானது என்பதால் தான் மன்னிப்பு கேட்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களில் நாடாளுமன்றம் மிருகக்காட்சிசாலை போன்று மாறியிருந்ததாகவும் சபாநாயகர் ஆசனத்தில் சில தகுதியற்றவர்கள் அமர்ந்ததாகவும் முஜிபுர் ரஹ்மான் தனது உரையில் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடதக்கது.