வெட்கப்படும் பிரதமர் ரணில்!

Report Print Steephen Steephen in அரசியல்

தற்போதைய நாடாளுமன்றத்தில் ஒழுக்கம், நெறிமுறை இல்லை எனவும் நாடாளுமன்றத்திற்குள் காணப்படும் நிலைமைகள் பற்றி பேச வெட்கமாக இருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டின் நாடாளுமன்றத்திற்கு என்ன நடந்துள்ளது என்பதை தான் நிதமும் சிந்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கரந்தெனியவில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“நான் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் நாடாளுமன்ற நிலைமைகள் பற்றி பேச வெட்கமாக இருக்கின்றது. பாடசாலை கிரிக்கெட் போட்டி முடிந்த பின்னர், இரண்டு பாடசாலைகளின் மாணவர்கள் நடந்துக்கொள்வது போன்ற நிலைமை கடந்த காலத்தில் நாடாளுமன்றத்தில் உறுப்பினர் நடந்துக்கொண்டனர்.

இவற்றை நாம் மூடி மறைப்பது நல்லதல்ல. நாட்டுக்கு நாங்கள் முன்னுதாரணத்தை வழங்க வேண்டும். நாங்கள் எப்படி முன்னோக்கி செல்வது. நடந்த தவறுகளை ஏற்றுக்கொள்ளவில்லை.

நாம் வெட்கப்பட்டாலும் நடந்த தவறுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். என்ன நடந்தது என்பதை அனைவரும் அறிந்துக்கொள்ள வேண்டும். சமூக வலைத்தளங்களில் மாணவர்கள், இளைஞர்கள் போட்ட பதிவுகளை நான் பார்த்தேன். இவற்றை நாம் திருத்த வேண்டும். நாங்கள் மக்களின் பிரதிநிதிகள். எம்மிடம் தவறுகள் இருந்தால், அது பற்றி பேச வேண்டும். இல்லாவிட்டால், ஜனநாயக அரசியல் இல்லாமல் போய்விடும்” எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.