போரில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்படவில்லை: பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர்

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கையில் நடைபெற்ற போரின் போது இரசாயன ஆயுதங்கள், கொத்து குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை பாதுகாப்பு அமைச்சு நிராகரிப்பதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இப்படியான ஆயுதங்கள் போரில் பயன்படுத்தப்பட்டதாக கூறி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் ஆதாயம் பெற முயற்சித்து வருகின்றனர்.

இலங்கை படையினர் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியமைக்கான எந்த சாட்சியங்களும் இல்லை. வடக்கில் வெள்ளம் ஏற்பட்ட போது படையினரே உதவினர். சில அரசியல்வாதிகள் இனவாதத்தை ஏற்படுத்த முயற்சித்து வருவது குறித்து கவலையடைகின்றேன் எனவும் ருவான் விஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற இரசாயன ஆயுதங்கள் தொடர்பான இணக்கப்பாடு குறித்த திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் முறை வாசிப்பு விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே ராஜாங்க அமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.