கிடைத்த சந்தர்ப்பத்தை தவறவிட்டார் ராஜபக்ஷ

Report Print Rakesh in அரசியல்

போரை வென்ற மஹிந்த ராஜபக்ஷ, வடக்கு மக்களுக்கு தீர்வை வழங்கும் மனநிலையில் இருக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொட மேற்கண்டவாறு குற்றம் சுமத்தினார்.

நிறைவேற்று அதிகாரம், நிலையான ஆட்சி, மாகாணசபைகள், உள்ளூராட்சி சபைகள் என அனைத்தையும் தன்னிடம் வைத்திருந்த மஹிந்த, ஏன் தமிழர்களுக்குத் தீர்வை வழங்க முன்வரவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

போரின் பின்னர், இரு இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. போரின் பின்னர் நாடு, நாட்டு மக்கள் குறித்து ஆழமாக சிந்தித்து செயற்படக் கூடிய பொன்னான வாய்ப்பு கிட்டியது.

போர் யாரால் முடிக்கப்பட்டது என்பதை புறம்தள்ளி, பொறுக்குப் பின் தேசியம் என்ற ரீதியில் எவ்வாறு சவால்களுக்கு முகம் கொடுப்பது என்று சிந்திருக்க வேண்டும்.

வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணவும், அதற்கான அடித்தளத்தை இடவும் நல்ல சந்தர்ப்பம் கிட்டியிருந்தது. இதனை நிறைவேற்ற தெற்கில் நிறைவேற்று அதிகாரம் இருந்தது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அரசு நிலையாக இருந்தது.

மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகள் என்பன அவர்களின் கைகளிலேயே இருந்தது.

இவை எல்லாவற்றையும் விட, நாடு குறித்து சிந்தித்து பொதுப்படையில் தீர்மானம் எடுக்கும் நிலையில் மக்கள் இருந்தார்கள். அப்போதைய தலைவர்கள் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றத் தயாராக இருந்திருந்தால், மக்களே பிரச்சினைகளைத் தீர்த்திருப்பார்கள். ஆனால், மஹிந்த அரசு கிடைத்த வாய்ப்பை எட்டி உதைத்தது.

நாட்டின் எதிர்காலத்துக்கான அரசமைப்பை, குடும்பத்தின் எதிர்க்காலத்திற்காக மாற்றி, 17ஆவது திருத்தத்தை திருத்தி 18ஐக் கொண்டு வந்தனர்.

எனவே, தற்போதுள்ள தலைவர்களும் அடுத்த தேர்தலில் எவ்வாறு வெற்றி பெறலாம், எவ்வாறு ஆட்சியைக் கவிழ்க்கலாம் என்று எண்ணாமல், மக்கள் குறித்து சிந்தித்து செயற்பட வேண்டும் என்றார்.

Latest Offers