வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் சுரேன் ராகவன் நல்லவரா என்பது பிரச்சினை அல்ல என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
மாறாக அவரின் செயற்பாடே முக்கியமானது எனவும் அவர் கூறியுள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “வடக்கின் ஆளுநராக சுரேன் ராகவனையும், கிழக்கின் ஆளுநராக ஹிஸ்புல்லாவையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே நியமித்துள்ளார்.
இதன் ஊடாக ஜனாதிபதியின் நோக்கம் ஒன்று என்பதை நன்கு புரிந்துகொள்ள முடிகின்றது. இந்நிலையில், ஆளுநர் சுரேன் ராகவன் நல்லவரா என்பது பிரச்சனை அல்ல. அவரின் செயற்பாடே முக்கியமானது” என அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, வட. மாகாண புதிய ஆளுநருடன் ஒற்றுமையாகக் கைகோர்த்து செயற்பட தயாராகவிருப்பதாக யாழ். மாநகர மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.
யாழ். பழைய பூங்கா வளாகத்திலுள்ள வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் பேசிய அவர், “மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் இம்முறை தாய்மொழியை பேசக்கூடிய, தாய்மண்ணை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒருவர் ஆளுநராக பதவியேற்றுள்ளமை எமக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
மக்கள் தந்த ஜனநாயக உரிமையை அரசியல் கட்சிகள் என்ற நிலைப்பாட்டை கடந்து மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதே எமது நோக்கம். அதற்கமைய புதிய ஆளுநருடன் ஒற்றுமையாகக் கைகோர்த்து செயற்பட தயார்” என அவர் மேலும் கூறியுள்ளார்.