வடக்கு மக்களுக்கு தண்ணீர் பெற்றுக்கொடுப்பதே எனது இலக்கு! ஜனாதிபதி

Report Print Murali Murali in அரசியல்

வடக்கு மக்களின் தண்ணீர் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக்கொடுப்பதன் மூலமே தமது நோக்கம் முழுமையடையும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் நிலவும் குடிநீர் மற்றும் விவசாயத்துக்கான நீர்ப்பாசனம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

களுகங்கை நீர்த்தேக்கத் திட்டத்தினை உத்தியோகபூர்வமாக மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வினையடுத்து இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் பேசிய ஜனாதிபதி, “வடக்கில் முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் போன்ற மாவட்டங்களின் கிராமிய பிரதேசங்களில் குடிநீருக்காக மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

கிராமங்களில் குடிப்பதற்குக் கூடத் தண்ணீர் கிடையாது. இந்த நிலையில் புதிய தண்ணீர் முதலாளிகள் உருவாகியுள்ளனர்.

பொது சுகாதார பரிசோதகரோ அல்லது நீர் வழங்கல் சபையோ எந்தவிதத்திலும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படாத நீரே ‘பரல்கள்’ மூலம் கொண்டுவரப்பட்டு மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு போத்தல் தண்ணீரின் விலை 2,3ரூபாவாக விற்கப்படுகிறது. அம்மக்களின் குடிநீர், விவசாயத்திற்கான நீர்ப்பாசனம் உள்ளிட்ட தேவைகள் கவனத்திற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், அவர்களின் வறுமை நிலையையும் குறிப்பிடவேண்டும்.

வடக்கு மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு முழுமையான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதன் மூலமே எனது எதிர்பார்ப்பு முழுமையடையும். அதில் முக்கிய கவனம் செலுத்தப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.