இலங்கையில் பாரிய தீ விபத்தில் மலர்ந்த இன நல்லிணக்கம்! பாராட்டும் சர்வதேச ஊடகங்கள்

Report Print Vethu Vethu in அரசியல்

இலங்கையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் இன நல்லிணக்கம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

கண்டி, யட்டிநுவர வீதியில் 5 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தனது குடும்பத்தையே காப்பாற்றிய வீர தந்தை குறித்து உள்ளுர் ஊடகங்கள் மட்டுமன்றி, சர்வதேச ஊடகங்களும் அதிமுக்கியத்துவம் கொடுத்துள்ளது.

கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் மிகுந்த போராட்டத்திற்கு மத்தியில் மனைவி மற்றும் பிள்ளைகளை ராமராஜ் என்ற தந்தை காப்பாற்றியிருந்தார்.

எனினும் தனது குடும்பத்தினரை உயிருடன் காப்பாற்றிய முழுப்பெருமையும் கண்டி மக்களுக்கே கிடைக்க வேண்டும் என ராமராஜ் தெரிவித்துள்ளார்.

தீயில் எரிந்து உயிரை விடுவதை விட பிள்ளைகளின் உயிரை காப்பாற்றுவதே நோக்கமாக இருந்தது. அதனாலேயே பிள்ளைகளை மேல் இருந்து கீழே தூக்கி வீசினேன்.

எனினும் கீழே இருந்து காயங்கள் இன்றி எனது பிள்ளைகளை பிடித்தவர்களை உண்மையான வீரர்கள் என்று கூற வேண்டும். அவர்களுக்கே அனைத்து கௌரவமும் கிடைக்க வேண்டும். அவர்களையே பாராட்ட வேண்டும் என ராமராஜ் கூறியுள்ளார்.

கண்டி மக்கள் மிகவும் நல்லவர்கள் என நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. மூன்று இனங்களை சேர்ந்த மக்களும் ஒன்றிணைந்து எம்மை காப்பாற்றியுள்ளனர்.

இந்த பகுதி மக்களிடம் இன, மத பேதங்கள் எதுவும் இல்லை. பிரச்சினை ஒன்று ஏற்பட்டால் சரியான நேரத்திற்கு ஒன்று கூடி விடுவார்கள். எங்கள் அதிஷ்டத்திற்கு எங்களை சுற்றியிருப்பவர்கள் அனைவரும் நல்லவர்கள் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தீ விபத்தில் காயமடைந்த ராமராஜ் மற்றும் அவரது மனைவிக்கு சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ராமராஜின் கையில் இருந்து கண்ணாடி துண்டுகள் எடுக்கப்பட்டதாகவும் மனைவியின் காலில் பாதிப்பு ஏற்பட்டமையினால் இரண்டு சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கண்டி வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கண்டியில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து தொடர்பில் பிபிசி, டெய்லிநியூஸ் உள்ளிட்ட பல சர்வதேச ஊடகங்கள் முன்னிலைப்படுத்தி செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.