நாவிதன்வெளி பிரதேசசபையின் 11ஆவது கூட்டத்தொடர் வெற்றிகரமாக நிறைவேற்றம்

Report Print Nesan Nesan in அரசியல்

அம்பாறை - நாவிதன்வெளி பிரதேச சபையின் 11ஆவது கூட்டத்தொடர் நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளர் தவராசா கலையரசன் தலைமையில் இன்று இடம்பெற்றுள்ளது.

பிரதேசசபை உறுப்பினர்கள் மக்களது பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றிற்கு தீர்வு காண்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என 2019 ஆம் ஆண்டிற்கான முதலாவது கூட்டத்தொடரின் போது தவிசாளர் தெரிவித்துள்ளார்.

மக்கள் அரசியல் பிரமுகர்களுடன் இணைந்து செயற்பட வேண்டும் வெறுமனே விமர்சனங்களை மாத்திரம் முன்வைத்துவிட்டு இலைமறை காயாக இருந்து விடக்கூடாது.

ஒவ்வொரு பிரஜைகளும் பிரதேச அபிவிருத்தியில் பிரதான பங்களிப்புக்களை செய்ய வேண்டும் அதன்போது தான் சமூகத்தில் ஒற்றுமை நிலை நாட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதன்போது நாவிதன்வெளி பிரதேசத்தில் விசேட தேவைகள் உள்ளவர்களுக்கு உரிய வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு உறுப்பினர்கள் அடையாளப்படுத்தி அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என ஏகோபித்த முடிவுகளுடன் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

விவசாயத்தை ஜீவனோபாயமாக கொண்ட நாவிதன்வெளி பிரதேச விவசாயிகளிடம் அரசாங்கம் வருடாவருடம் நெல் அறுவடை முடிந்து இரண்டு மாதங்களின் பின் நெற்கொள்வனவு செய்து வருகின்றது.

ஆனால் இந்த ஆண்டு நெல் சந்தைபடுத்தல் விலையில் வீழ்ச்சி ஏற்படும் எனும் ஊகத்தினடிப்படையில் இந்த போகத்திற்கான நெற்கொள்வனவை முற்கூட்டி அறுவடை நேரங்களில் கொள்வனவு செய்வதற்கு நெல் கொள்வனவு சபைக்கு அறிவுறுத்தல் செய்யப்பட வேண்டும் எனவும் குறித்த சபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் போது பிரேரணைகள், விவாத பிரதிவாதங்கள் மற்றும் உறுப்பினர்களின் ஆலோசனைகள் என்பன பெறப்பட்டுள்ளன.