ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரியா? மகிந்தவின் மாறுப்பட்ட கருத்து

Report Print Steephen Steephen in அரசியல்
228Shares

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டணியின் சார்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே வேட்பாளராக நிறுத்தப்படுவார் என முன்னாள் அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறியிருந்தார்.

எனினும் இதற்கு மாறான கருத்தொன்றை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ள எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பற்றி இதுவரை தீர்மானிக்கவில்லை எனக் கூறியுள்ளார்.

அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை நிறுத்தும் தீர்மானம் பற்றியும் தனக்கு எதுவும் தெரியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் பற்றி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் ஒன்றை கூறுவதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் மற்றுமொன்றை கூறுவதாகவும் தான் அறிந்த வகையில் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இதுவரை எந்த தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை எனவும் மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட மகிந்த சமரசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் எனவும் அவரை நிறுத்த, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் கிடைக்கும் எனவும் கூறியிருந்தார்.

கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றுக்கு கிடைத்த மொத்த வாக்குகளை கூட்டினால், 57 வீதம்.

இந்த முடிவுகளுக்கு அமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலகுவாக வெற்றி பெற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.