இந்தியாவிடம் எதனையும் அடகு வைக்க மாட்டோம்! ரணில் உறுதி

Report Print Steephen Steephen in அரசியல்

இந்தியாவின் மத்திய வங்கி, இலங்கைக்கு வழங்கும் 400 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்காக திருகோணமலை சீனக்குடா துறைமுகம் மற்றும் மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அரசாங்கம் இணங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் விமல் வீரவங்ச முன்வைத்த குற்றச்சாட்டுடன் கூடிய இந்த கேள்விக்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதிலளித்துள்ளார்.

இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் 400 மில்லியன் டொலர் பணத்திற்காக இலங்கையில் உள்ள எந்த அரச சொத்துக்களும் இந்தியாவுக்கு விற்பனை செய்யப்பட மாட்டாது. நாங்கள் எதனையும் இந்தியாவிடம் அடகு வைக்க மாட்டோம்.

இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிக்கும் நோக்கில் இலங்கை மத்திய வங்கி விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்திய மத்திய வங்கி இந்த பணத்தை வழங்க இணங்கியுள்ளது என ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

அதேவேளை இந்திய மத்திய வங்கியிடம் இருந்து மேலும் ஒரு பில்லியன் டொலர் பணத்தை பெற்றுக்கொள்வது தொடர்பில் இருதரப்பு பரிமாற்ற உடன்படிக்கையை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இந்திய மத்திய வங்கியிடம் இருந்து கிடைக்கும் இந்த நிதி, இலங்கை தொடர்பில் முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரிக்க காரணமாக அமையும் எனவும் போதுமான அந்நிய செலாவணி கையிருப்பை வைத்திருக்க உதவும் எனவும் மத்திய வங்கி கூறியுள்ளது.

தெற்காசிய ஒத்துழைப்பு அமைப்பான சார்க் அமைப்பின் பரிமாற்ற வசதிகளின் கீழ் இந்த பணம் இலங்கைக்கு கிடைக்க உள்ளது.

கடந்த ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில் இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பில் இருந்த 1.1 பில்லியன் டொலர் இல்லாமல் போனதாகவும் அந்நிய செலவாணி கையிருப்பு 6.94 பில்லியன் டொலராக குறைந்தது எனவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.