இனவாதத்தை தூண்டி இரத்தம் சிந்தி ஆட்சியை கைப்பற்ற முயற்சிக்கும் மகிந்த தரப்பு: சமன் ரத்னபிரிய காட்டம்

Report Print Steephen Steephen in அரசியல்

மகிந்த ராஜபக்ச தரப்பினர் இனவாதத்தை தூண்டி இரத்தம் சிந்தல் மூலம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிப்பதாகவும் தாம் அதற்கு இடமளிக்க போவதில்லை எனவும் சிவில் சமூக செயற்பாட்டாளரான சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவில் இன்று விசாரணைக்கு ஆஜராக சென்றிருந்த போது செய்தியாளர்களிடம் அவர் இதனை கூறியுள்ளார்.

பிவித்துரு ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் மற்றும் கலகமுவே தம்மரன்சி தேரர் ஆகியோர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவு இன்றும் என்னை விசாரணைக்கு அழைத்துள்ளது.

அதில் எந்த பிரச்சினையும் இல்லை. இந்த விசாரணைகளை நாங்கள் தைரியமாக எதிர்கொள்வோம். நான் வெளியிட்ட அரசியல் கருத்து தொடர்பாகவே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக கூறவேண்டிய மூன்று விடயங்கள் உள்ளன.

எனது அரசியல் கருத்து நாட்டில் விரோதங்களை ஏற்படுத்தும் கருத்து அல்ல. நான் வெளியிட்ட கருத்தின் பின்னர், நாட்டில் மக்கள் மத்தியில் குழப்பங்கள் எதுவும் ஏற்படவில்லை.

ஜனாதிபதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் நாட்டில் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையிலும் நான் கருத்து வெளியிட்டுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளனர். அவர்களின் முதல் வாதம் முறியடிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது நாங்கள் வெளியிட்ட கருத்து 100 வீதம் சரியானது என்பதை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. ஜனாதிபதி அரசியலமைப்புச் சட்டத்தை மீறினார் என்று நாங்கள் கூறினோம். அந்த தவறையே நாங்கள் சமூகமயப்படுத்த முயற்சித்தோம். இதனை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. மேன்முறையீட்டு நீதிமன்றமும் உறுதிப்படுத்தியது. அப்படியானால் இந்த வாதமும் எடுப்படாது.

அத்துடன் கலகமுவே தம்மரன்சி தேரர் போன்றோரும் பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில உள்ளிட்டோரும் நாட்டில் தொடர்ந்தும் இனவாதத்தை பரப்பி வருபவர்கள். இவர்கள் மீண்டும் இனவாதத்தை தூண்டி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிப்பதை நாங்கள் கடந்த வாரமும் பார்த்தோம். நாங்கள் மூன்று தசாப்தங்கள் யுத்தம் ஒன்றை எதிர்நோக்கியவர்கள்.

நாட்டில் மீண்டும் இரத்தம் சிந்த இடமில்லை. அதற்கு நாங்கள் இடமளிக்கவும் மாட்டோம். சிங்கள, முஸ்லிம், தமிழ் மக்களின் இரத்தத்தினை சிந்த செய்து, கம்மன்பில போன்றவர்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முயற்சித்து வருகின்றனர்.

அதே முயற்சியில் மகிந்த ராஜபக்ச தரப்பினரும் முயற்சித்து வருகின்றனர். இந்த அணிகள் இணைந்தே எமக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளனர். மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சியை நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.

இனவாதத்தை தூண்டுபவர்களுக்கு எதிராக தற்போது முறைப்பாடுகள் செய்யப்படுவதில்லை. விசாரணைகள் இல்லை. எனினும் அரசியல் கருத்தை வெளியிட்ட சமன் ரத்னபிரியவுக்கு எதிராக முறைப்பாடு செய்து, அடக்க முயற்சித்து வருகின்றனர்.

மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி ஆசனத்தில் அமரவைக்க நான் 200க்கும் மேற்பட்ட கூட்டங்களில் உரையாற்றியவன் என்பதை அவருக்கு நினைவூட்ட விரும்புகிறேன். இவற்றையும் நினைவில் வைத்துக்கொண்டு இந்த அடக்குமுறையை தொடருமாறு நாங்கள் கோருகிறோம் எனவும் சமன் ரத்னபிரிய குறிப்பிட்டுள்ளார்.