பல வருடங்களாக சிறைச்சாலைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுவிக்க ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நீதி அமைச்சர் ஆகியோர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர், “சிறு குற்றங்களைச் செய்தவர்கள் பாரிய தண்டனைகளை அனுபவிக்கின்றார்கள். ஆனால், பாரிய குற்றங்களைச் செய்தவர்கள் பெரிய நபர்களாக சுதந்திரமாக உலா வருகின்றனர்.
பயங்கரவாதச் தடைச் சட்டமானது எமது தமிழ் மக்களை மிகவும் பாதிப்புக்குள்ளாக்குகின்றது. இந்தச் சட்டத்தின் மூலம் இளைஞர்கள் பலர் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டுள்ளார்கள்.
இந்த நிலை மாற வேண்டும். போர்க்குற்றங்களை இழைத்தவர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றார்கள். எனவே, போர்க்குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும்.
இதேவேளை, இராணுவத்தின் வசமிருக்கும் பாடசாலைகள் உடன் விடுவிக்கப்பட வேண்டும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.