நாட்டுக்கு ஆபத்தானது! மக்கள் முடிவெடுக்கட்டும்

Report Print Rakesh in அரசியல்

தற்போதைய சூழ்நிலையில் புதிய அரசமைப்பு நாட்டுக்கு ஆபத்தானது. இதை கொண்டு வருவதற்கு இந்த நாடாளுமன்றம் ஏற்புடையதல்ல என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஒரு இனம் மற்றுமொரு இனத்தை அடக்கி ஒடுக்கி மிதித்து ஆள முற்பட கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசமைப்பு நிர்ணய சபை பிரதி சபாநாயகர் தலைமையில் இன்று முற்பகல் 10 மணிக்கு கூடியது.

புதிய அரசமைப்புக்கான நிபுணர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களின் உத்தேச வரைவுத்திட்டத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபையில் முன்வைத்தார்.

அதன் பின்னர் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசமைப்பைக் கொண்டுவரும் தரப்பு கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்தது.

எனவே, இந்த விடயத்தில் மக்களின் நிலைப்பாடு என்னவென்பது அறியப்படவேண்டும். மாகாணசபைத் தேர்தல் கூட இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது.

எனவே, புதிய அரசமைப்பை இயற்றுவதற்குரிய சூழ்நிலை இதுவல்ல. நாடாளுமன்ற தேர்தலுக்குச் செல்வோம்.

புதிய அரசமைப்பு தொடர்பில் நீங்கள் உங்கள் தரப்பு யோசனையை முன்வையுங்கள். நாங்கள் எமது தரப்பு யோசனையை முன்வைக்கின்றோம்.

மக்கள் முடிவெடுக்கட்டும். அதன் பின்னர் நாடாளுமன்றம் ஆராயட்டும் என குறிப்பிட்டுள்ளார்.