விகாரை, விகாரையாக செல்லும் மஹிந்த அணி! புத்தபெருமானின் முன்னிலையில் செய்யும் காரியம்

Report Print Rakesh in அரசியல்

புதிய அரசமைப்பு தொடர்பில் மஹிந்தவும், அவரின் சகாக்களுமே விகாரை, விகாரையாக சென்று போலிப் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றதாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசமைப்பு நிர்ணய சபையில் இன்று உரையாற்றிய அநுரகுமார திஸாநாயக்க மேலும் கூறுகையில்,

இனவாதத்தை தூண்ட வேண்டாம், குரோதத்தை விதைக்க வேண்டாம் என மஹிந்த ராஜபக்ஷ சற்று நேரத்துக்கு முன்னர் உரையாற்றும் போது குறிப்பிட்டார்.

ஆனால், அவரும் அவரின் சகாக்களுமே விகாரை, விகாரையாக சென்று மக்களை குழப்பும் வகையில் இனவாத கோணத்தில் பரப்புரைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஏப்ரல் மாதத்துக்குள் நாடு பிளவுபடும், சமஷ்டி அரசியலமைப்பு உருவாகும், 09 பொலிஸ் நிலையங்கள் உருவாகும் என்றெல்லாம் அறிவிப்புகளை விடுத்து வருகின்றனர்.

10 வருடங்கள் ஜனாதிபதி பதவியை வகித்த ஒருவர்கூட, புதிய அரசமைப்பு தொடர்பில் போலிக் கருத்துக்களை முன்வைத்து வருகின்றார்.

இது அவருக்கு வெட்கமில்லையா? கிராமமொன்றுக்கு சென்று பொய்யுரைத்தால்கூட பரவாயில்லை. ஆனால், விகாரை விகாரையாகச் சென்று, வழிபாடுகளில் ஈடுபட்டு - பிரித் நூல்களை கட்டியபடி புத்தபெருமானின் முன்னிலையிலேயே பொய்யுரைக்கின்றனர்.

இது தகுமா? புதிய அரசமைப்பு ஊடாக நாடு பிளவுபடாது. அதற்கு ஜே.வி.பி இடமும் அளிக்காது. அரசமைப்பு யோசனைக்கு நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைகிடைக்காவிட்டால் அதன்பிறகு ஓர் அடியேனும் முன்வைக்க முடியாது. எனவே, வீண்பரப்புகளைகளை முன்வைக்க வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers