மஹிந்தவுக்கு அடித்த அதிர்ஷ்டம்!

Report Print Vethu Vethu in அரசியல்

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இரண்டு உத்தியோகபூர்வ இல்லங்கள் கொழும்பில் வழங்கப்படவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷவை தற்போது எதிர்க்கட்சித் தலைவராக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவிகளுக்கான உத்தியோகபூர்வ இல்லங்களை மஹிந்த பெற்றுக்கொள்ளவுள்ளார்.

ஏற்கனவே கொழும்பு 7 விஜேராம மாவத்தையில் மஹிந்தவுக்கு உத்தியோகபூர்வ இல்லம் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது எதிர்க்கட்சித் தலைவருக்கான உத்தியோகபூர்வ இல்லத்தை பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்.

முன்னாள் எதிர்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தன் பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லத்தை மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறித்த உத்தியோகபூர்வ இல்லத்தை சம்பந்தனிடம் இருந்து பெற்றுக் கொள்வதில் சிக்கல் இல்லை என பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தை மீளவும் வழங்குவது தொடர்பில் முன்னாள் எதிர்கட்சி தலைவர் சம்பந்தனிடம் வினவிய போது, அதற்கு பதிலளிக்காதவர் இது குறித்து தனது தனிப்பட்ட செயலாளர் தீபிகா சுபசிங்கவிடம் கேட்குமாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆனாலும் உத்தியோகபூர்வ இல்லம் அரச நிர்வாக அமைச்சின் கீழ் உள்ளமையினால் அமைச்சிடமே கேட்க வேண்டும் என தனிப்பட்ட செயலாளர் கூறியுள்ளார்.

மஹிந்தவுக்கு எதிர்க்கட்சி தலைவரின் உத்தியோகபூர்வ இல்லம் கிடைத்தால் அவருக்கு இரண்டு அரச உத்தியோகபூர்வ இல்லங்கள் கிடைத்துவிடும்.

கொழும்பில் தங்குவதற்கு தனக்கு வீடொன்றை வழங்குமாறு சமகால ஜனாதிபதியிடம் மஹிந்த விடுத்த கோரிக்கைக்கு அமைய உத்தியோகபூர்வ வீடு வழங்கப்பட்டது.

குறித்த வீடு 40 மில்லியன் ரூபா செலவில் பழுது பார்க்கப்பட்டு மஹிந்தவிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த 6 மாதங்களாக மஹிந்த ராஜபக்ச அந்த வீட்டிலேயே தங்கியிருக்கின்றார்.

எனினும் எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட்ட சம்பந்தன், கடந்த 9 மாதங்களாக தனது சிறிய வீடு ஒன்றிலேயே தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.