வட மாகாணம் முழுவதும் மனிதப் புதைகுழிகள்! அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ள அனந்தி

Report Print Suthanthiran Suthanthiran in அரசியல்

மன்னார் மாவட்டத்திலும், யாழ்ப்பாணம் மண்டைதீவிலும் மட்டுமல்ல வடமாகாணம் பூராகவும் இராணுவம் நிலைகொண்டுள்ள சகல இடங்களிலும் மனிதப் புதைகுழிகளும், மனித எச்சங்களும் மீட்கப்படும் என முன்னாள் மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக பதில் அளித்துள்ள அனந்தி சசிதரன்,

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் மிக நீண்ட வரலாறு இந்த மண்ணிற்கு உண்டு. மன்னார் புதைகுழி என்பது மனித குலத்திற்கு எதிரான மனங்களை உலுக்குகின்ற சம்பவமாக உள்ளது. குறிப்பாக 26ற்கு மேற்பட்ட குழந்தைகளுடைய உலும்புக் கூடுகள் அங்கு மீட்கப்பட்டுள்ளன.

இதுமட்டுமல்ல இரும்பு சங்கிலியால் கட்டப்பட்ட எலும்புக் கூடுகளும் அங்கு மீட்கப்பட்டுள்ளது. இந்த அகழ்வுக்கு சர்வதேச மத்தியஸ்தம் வேண்டும்.

ஏனெனில் இலங்கையில் அரசில் தமிழர்களுக்கு நம்கிக்கை இல்லை. வடக்குஇ கிழக்கு மாகாணங்களில் இராணுவம் நிலை கொண்டிருந்த அனைத்து பகுதிகளிலும்

மனித புதைகுழிகள் உள்ளன. எனவே இராணுவம் நிலை கொண்டிருந்த பகுதிகளிலும் ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். ஏனெனில் ஏராளமான மக்கள் காணாமல் போயுள்ளார்கள்.

எங்களிடம் சரியான புள்ளிவிபரங்கள் இல்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் கிளி பாதர் இருந்த வரையிலான கணிப்பீடு ஒன்று உள்ளது. அதுதவிர வேறு புள்ளிவிபரங்கள் இல்லை.

இன்று கூட இந்திய இராணுவத்தின் 1987 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கடலில் வைத்தும் வீடுகளில் வைத்தும் தமது உறவுகள் காணாமல் போயுள்ளார்கள் என்று என்னிடத்தில் வந்து பதிவு செய்கின்றவர்கள் உள்ளார்கள்.

சர்வதேச நாடுகளின் உதவிகளை நாட வேண்டிய நிலையில் தமிழர்கள் உள்ளார்கள். ஏனெனில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் காணாமல் போன தமது உறவுகளில் எச்சங்களாக இருக்கலாம் என்று அஞ்சுகின்றார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மண்டைதீவு உட்பட மேலும் பல தீவுகளில் மனித புதை குழி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த விடையம் தொடர்பில் அனைத்து அரசியல் தலைவர்களும் பொது அமைப்புக்களும் சர்வதேச உதவியினை நாட வேண்டும் .

இதேவேளை, சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் செய்தியாளர்கள் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதில் தெரிவித்த அனந்தி சசிதரன்,

முப்படைகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ள சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்ய வேண்டும்.

யுத்தக்குற்றவாளியாக முன்னிறுத்தியுள்ள சவேந்திர சில்வாவிற்கு உயர்பதவி வழங்கியிருப்பது தமிழ் மக்களுக்கு வேதனை அழிக்கின்றது.

முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்படுவதற்கும் நூற்றுக்கணக்கானோர் சரணடைந்து, கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டமைக்கு காரணமாக இருந்த இந்த யுத்த குற்றவாளியை முப்படைகளின் பிரதானியாக ஜனாதிபதி நியமித்திருப்பது என்பது நாட்டில் யுத்தக் குற்றங்களுக்கான பொறுப்புக் கூறலை ஒட்டுமொத்தமாக கேள்வி குறியாக்கியுள்ளது.

அண்மையில் இந்த நாட்டில் ஏற்பட்ட குழப்பம் தொடர்பில் நீதிமன்றங்கள் ஜனநாயகத்தை நிலை நிறுத்தியுள்ளதாக தெரிவித்து யுத்தக் குற்றங்களுக்கும் உள்ளக விசாரணை போதும் என்ற நிலைப்பாட்டை அரசு ஏற்படுத்துகின்றது.

இருப்பினும் தமிழர்கள் யுத்தக் குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணையையே வேண்டி நிற்கின்றார்கள். இந்த நிலையில் சவேந்திர சில்வாவினுடைய நியமனம் தமிழ் மக்களுக்கு யுத்தக் குற்றம் உட்பட வேறு எந்த ஒரு நீதியும் இடைக்காது என்பதையே காட்டி நிற்கின்றது.

கடந்த காலங்களில் வெளிநாடுகளிற்குச் செல்லும் போது எந்த சந்தர்ப்பத்திலும் அவர் கைது செய்யப்படலாம் என்ற நிலை இருந்த போது இன்று அவரை முப்படைகளின் பிரதானியாக நியமித்திருப்பது என்பது இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காத தன்மையினையே வெளிப்படுத்தி நிற்கின்றது.

நல்லாட்சி, நல்லிணக்கம் என்று அரசாங்கம் பேசிக்கொண்டிருந்தாலும், ஈடு செய்ய முடியாத யுத்த இழப்புக்களை சந்தித்த தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியாத நிலையிலேயே இலங்கை அரசாங்கம் உள்ளது.

யுத்தக் குற்றங்களுக்கு பொறுப்புக் கூறும் வரையில் தமிழ் மக்களின் மனங்களை வெல்ல சிங்கள பேரினவாத அரசாங்கத்தினால் ஒருபோதும் இயலாது.

சவேந்திர சில்வாவினுடைய நியமனம் என்பது ஒட்டுமொத்த தமிழர்களும் நிராகரிக்கின்ற, வெறுக்கின்ற செயற்பாடாகவே இருக்கின்றது.

எனவே சர்வதேசம் சவேந்திர சில்வாவினுடைய நியமனம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். நாட்டில் கடந்த காலத்தில் நடைபெற்ற குழப்பத்திற்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நீதியானது என்பதை பேசும் சர்வதேச இராஜதந்திரிகள் சவேந்திர சில்வாவினுடைய நியமனத்தில் உள்ள உள்ளார்ந்த அர்த்தத்தை பார்க்க வேண்டும்.

என்னுடைய கணவரான எழிலன் உட்பட ஏராளமானவர்கள் காணாமல் போகச் செய்யப்பட்ட வழக்குக் கூடா யுத்த காலத்தில் 58 ஆவது படைப்பிரிவின் தளபதியாக இருந்த இதே சவேந்திர சில்வாவிற்கு எதிராகத்தான் தொடர்ந்துள்ளோம்.

இறுதி யுத்தத்தின் போது பசியோடு உணவிற்காக வரிசையில் காத்திருந்த அந்த நூற்றுக்கணக்கான சிறுவர்கள் மீது மல்ரிபெரல் செல் தாக்குதல் நடத்தி சிறுவர்களை கொண்ட குற்றவாளியும், இறுதி யுத்தத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதற்கும் காரணமாக இருந்தவர் சவேந்திர சில்வாவே.

மேலும் இறுதி யுத்தத்தில் வெள்ளை கொடியுடன் சரணடைந்த நடேசன் உட்பட ஏனைய போராளிகளின் தொடர்பிலும் இவர்தான் பொறுப்புக்கூற வேண்டியவராக உள்ளார்கள்.

சவேந்திர சில்வா தொடர்பான யுத்தக் குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் இன்று நேற்று வெளியிடப்பட்டவை இல்லை.

இவை சர்வதேசத்திற்கே தெரிந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள்.இவை அனைத்தையும் தெரிந்திருந்தும் இந்த சிறிலங்கா அரசாங்கம் சவேந்திர சில்வாவை முப்படைகளின் பிரதானியாக நியமித்திருப்பது என்பது கவலை தருகின்றது.

தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காது, யுத்தக் குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக் கூறலில் இருந்து நழுவிச் செல்லும் சிறிலங்கா அரசாங்கத்தின் தந்திரச் செயல் சவேந்திர சில்வாவினுடைய நியமனம் மட்டுமல்ல.

மற்றுமொரு யுத்தக் குற்றவாளியாக சரத் பொன்சேகாவிற்கு பில்ட் மாஸ்டர் பதவியினை வழங்கியதும் அரசின் தந்திர செயற்பாடுகளில் ஒன்றாகும்.

இவை அனைத்தும் தமிழர்கள் ஒருபோதும் இராணுவத் தரப்பை யுத்தக் குற்றவாளியாக்க முடியாது என்பதை அரசாங்கம் நேரடியாக செல்லுகின்ற விடயமாகும்.

இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்களின் மனங்களை உண்மையில் வெல்ல வேண்டுமாக இருந்தால் யுத்தக்குற்றவாளியான சவேந்திர சில்வாவிற்கு வழங்கப்பட்ட பதவி தொடர்பில் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.