கனவாக மாறிவரும் மைத்திரியின் ஆசை: மகிந்த அணியில் கிளம்பியுள்ள கடும் எதிர்ப்பு

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக நிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குள் கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ச ஒருவர் போட்டியிட்டு வெற்றி பெற்றால் மட்டுமே தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உயிரும் பாதுகாக்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் (மகிந்த அணி) நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உயிருக்கு ஆபத்து இருக்கும்.

இதனால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 47 வீதம் வாக்குகளை பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரை நிறுத்துவதா அல்லது 14 வீத வாக்குகளை பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளரை நிறுத்துவதா என்பதை தீர்மானிப்பது மிகவும் சுலபமானது.

இந்த நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன என மைத்திரி தரப்பு தொடர்ந்தும் கூறி வருவது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குள் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அத்துடன் தாமரை மொட்டுச் சின்னத்தை அடுத்த தேர்தலில் பயன்படுத்தப்பட மாட்டாது எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுவின் கீழ் போட்டியிடுவதில்லை எனவும் மைத்திரி தரப்பினர் கூறி வருகின்றனர்.

அதற்கு பதிலாக புதிய கூட்டணி உருவாக்கப்படும் என மைத்திரி தரப்பினர் தெரிவித்து வருகின்றனர். மைத்திரி தரப்பினர் இந்த கருத்துக்கள் சம்பந்தமாகவும் பொதுஜன பெரமுன கடும் எதிர்ப்புகளை முன்வைத்து வருகின்றனர்.

இது சம்பந்தமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கத்துவம் பெற்றுக்கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஞ்சா விஜேசேகர தனது முக நூலில் பதிவு ஒன்றையும் இட்டுள்ளார்.

ஜனாதிபதி சிறிசேனவுடன் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தோற்கும் வரை ஆளும் கட்சியில் இருந்தனர். மூன்று ஆண்டுகள் நாட்டை அழித்தனர். நாட்டில் விற்பனை செய்த அனைத்தும் ஆதரவளித்தனர். நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அனைத்து சட்டமூலங்களையும் நிறைவேற்ற ஆதரவளித்தனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர்களை தோற்கடிக்க வேலை செய்தவர்கள் தற்போது, தாமரை மொட்டுச் சின்னத்தின் உரிமையாளர்கள் போல் நெலும் மாவத்தை அலுவலகத்தை பிடித்துக்கொண்டுள்ளனர்.

சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என நெலும் மாவத்தை இருந்து முதல் யோசனை வந்தாலும் ஆச்சரியமில்லை.

கொள்கை அற்றவர்களை மீண்டும் இணைத்துக் கொண்டதன் பிரதிபலனை மறுபடியும் அனுபவிக்க நேரிடும். யாரும் இல்லாத நேரத்தில் இருந்தவர்கள் கூறுவதை செவிசாய்த்து கேட்கவில்லை என்றால், சிலர் வெளிநாடு செல்வர், மேலும் சிலர் கட்சி மாறுவர். அப்போது ஜனவரி 9 ஆம் திகதி எஞ்சியிருந்தவர்களே மீண்டும் எஞ்சியிருப்பர் என காஞ்சன விஜேசேகர தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.