சவேந்திர சில்வாவின் நியமனத்திற்கு வடக்கு கிழக்கில் கடும் எதிர்ப்பு!

Report Print Murali Murali in அரசியல்

இராணுவத்தின் பிரதானியாக மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வா நியமிக்கபட்டமைக்கு எதிராக வடக்கு கிழக்கினை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இராணுவத்தின் பிரதானியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அண்மையில் நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்திற்கு பல்வேறு தரப்பினர்களும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் சவேந்திர சில்வாவின் நியமனத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் இணைப்பாளர் கனகரஞ்சினி யோகராசா சர்வதேச ஊடகம் ஒன்றிடம் கருத்து தெரிவிக்கையில்,

“வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நாங்கள் எங்களது கோரிக்கைகளை முன்வைத்தோம்.

எனினும், இது வரையிலும் எமக்கு தீர்வு கிடைக்கவில்லை. தற்போது யுத்தக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய ஒருவருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவி உயர்வு வழங்கியுள்ளார்.

யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சரணடையும் போது மேஜர் ஜென்ரல் சவேந்திர சில்வா தலைமை தாங்கிய படையணி ஊடாகவே அவர்களை கையளித்திருக்கின்றோம்.

எனினும், அவர்கள் இன்று காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். இராணுவத்திடம் கையளிக்கப்பட்டவர்கள் எங்கே? அவர்களுக்கு என்ன நடந்தது. இதற்கு யார் பதில் கூறுவார்கள்?

நாங்கள் இரண்டு ஆண்டுகளாக போராடி வருகின்றோம். எங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது? என்ற பதிலினை தரவேண்டிய பொறுப்பில் சவேந்திர சில்வா இருக்கின்றார்.

இவ்வாறான நிலையில், சவேந்திர சில்வாவை பாதுகாக்கும் நோக்கில் ஜனாதிபதி அவருக்கு பதவி உயர்வு வழங்கியிருப்பது கவலையளிக்கின்றது” என அவர் மேலும் கூறியுள்ளார்.