மனோ கணேசனை தொடர்பு கொண்டு 65 கோடி ரூபாவிற்கு பேரம் பேசினேன்: சஜீவானந்தன்

Report Print Akkash in அரசியல்

கடந்த 50 நாள் அரசியல் நெருக்கடியின் போது, எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் அமைச்சர் மனோ கணேசன் இணைவதற்கு தனது விருப்பை ஊடகங்களில் தெரிவித்த வேளை தான் மனோ கணேசனை தொடர்பு கொண்டு 65 கோடி ரூபாவிற்கு பேரம் பேசியதாக சுயாதீன அணியைச் சேர்ந்த ஆ.சஜீவானந்தன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பானது, மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பதற்கு மனோ கணேசனை மேல் மாகாண சபை உறுப்பினர் சண்.குகவரதன் 65 கோடி ரூபாவுக்கு பேரம் பேசியதாக ஜனநாயக மக்கள் முன்னணி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கமளிக்கும் வகையில் நடைபெற்றுள்ளது.

இதன் போது மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

அமைச்சர் மனோ கணேசனை மகிந்தவுக்கு ஆதரவாக செயற்படுத்துவதற்காக பேரம் பேசியமைக்கும் மேல் மாகாண சபை உறுப்பினர் சண்.குகவரதனுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை.

மேலும் கடந்த நாட்களில் இடம்பெற்ற அரசியல் நெருக்கடி நிலையின் போது மேல் மாகாண சபை உறுப்பினர் சண்.குகவரதன், மனோ கணேசனுடன் தொலைபேசியினூடாக தொடர்பு கொண்டு பேரம் பேசியதாக குறிப்பிடப்படும் குற்றச்சாட்டு போலியானதாகும்.

மனோ கணேசனை மகிந்தவுடன் இணையுமாறு 65 கோடி ரூபாவுக்கு நானே அழைப்பு விடுத்தேன்.

கடந்த 9ஆம் திகதி ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் வேலு குமார் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் நானும் அமைச்சர் மனோ கணேசனும் பேசிய தொலைப்பேசி அழைப்பின் ஒலிப்பதிவை காரணம் காட்டி மேல் மாகாண சபை உறுப்பினர் சண்.குகவரதன் கட்சியின் ஒழுங்கு விதிகளை மீறி செயற்பட்டிருந்ததாகவும், அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க போவதாகவும் தெரிவித்திருந்தார்.

ஆனால், இந்த தொலைப்பேசி அழைப்புக்கும் சண்.குகவரதனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

சென்ற வருடம் மார்ச் மாதம் கட்சித் தலைமையின் எதேச்சாதிகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியிலிருந்து நாங்கள் வெளிநடப்பு செய்திருந்தோம்.

அதன் பின்னர் அமைச்சர் மனோ கணேசனுடன் தொடர்ந்து தொலைப்பேசி அழைப்புக்களினூடாகவே பேசி வந்தேன்.

மேலும், நாங்கள் மகிந்த அணிக்கு சார்பாக செயற்பட்டு வருவதாக எங்கள் மீது தொடர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

மகிந்தவுடன் இணைவதில் மனோ கணேசன் தனது விருப்பை ஊடகங்களிலும் அரசியல் நெருக்கடிக்கு முன்னர் அறிவித்து வந்த நிலையிலேயே அந்த நிலைமைகளின் போது எனக்கு கிடைக்கப் பெற்ற கோரிக்கையின் அடிப்படையில் நான் மனோ கணேசனை தொடர்பு கொண்டேன்.

நான் மனோ கணேசனை 65 கோடி ரூபாவுக்கு பேரம் பேசியது உண்மை.

அனைத்துப் பிரச்சினைகளும் முடிந்து அரசாங்கமொன்று உருவாக்கப்பட்டதன் பின்னர் இந்த விடயத்தை விமர்சனத்துக்கு எடுத்துக்கொள்வது சிக்கலுக்குரிய விடயமாகும். இதற்கு பிரதான காரணம் மனோ கணேசனின் சுயநலமாகும்.

கொழும்பில் தனக்கு நிகராக தமிழ் அரசியல் தலைமைகள் உருவாகிவிடக் கூடாது என்பதற்காகவே தேவையற்ற கருத்து முரண்பாடுகளை மனோ கணேசன் உருவாக்கி வருகின்றார்.

நாட்டில் அரசியல் நெருக்கடியிலிருந்த சந்தர்ப்பத்தில் நான் உட்பட பசில் ராஜபக்ச உள்ளிட்டோரும் மகிந்தவுடன் இணைந்து செயற்படுவதற்காக அழைப்பு விடுத்ததாக அறிவித்திருந்தார்.

ஆகவே, நான் அவருடன் பேசிய விடயங்களை ஒலிப்பதிவு செய்து வைத்திருப்பாரானால் அவர்கள் பேசியதும் அவர்கள் பேசிய ஒலிப்பதிவுகளும் அவரிடம் காணப்படும்.

என்னுடைய குரல் பதிவுகள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் போது அவர்களின் குரல் பதிவுகளும் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Latest Offers