எமது கட்சியிலிருந்து பாய்ந்தவருக்கு கிடைத்த அமைச்சும் இல்லாமல் போய்விட்டது! த.தே.கூட்டமைப்பு

Report Print Kumar in அரசியல்

பிரிக்கப்படாத நாட்டுக்குள் தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமையுடன் வாழக்கூடிய ஒரு சுதந்திரமான சூழலையே தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்பார்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சஜித் பிரேமதாசவின் 52ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஏழு வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றுள்ளது.

அடிக்கல் நாட்டும் நிகழ்வு முதலில் மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சத்துருக்கொண்டானில் நடைபெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

இருக்கின்ற அமைச்சர்களில் ஊழல் செய்யாமல் மக்களுக்கு சேவை செய்கின்ற அமைச்சர் என்ற அடிப்படையில் சஜித் பிரேமதாசவை நாங்கள் அடையாளம் கண்டிருக்கின்றோம்.

கட்சி பேதமில்லாமல் சகலருக்கும் மதிப்பளித்து செயற்படுகின்ற அமைச்சர் என்ற வகையில் எந்தவொரு இடத்திற்கு சென்றாலும் பெயர் சொல்லி அழைத்து மற்றவர்களை கௌரவப்படுத்துகின்ற ஒரு அமைச்சராகவும் அவர் இருக்கின்றார்.

நேற்று நாடாளுமன்றத்தில் புதிய அரசியலமைப்புக்கான நிபுணர்களின் அறிக்கை கொண்டுவரப்பட்டிருக்கின்றது. அமைச்சர் மனோகணேசன் இந்த அறிக்கை பற்றி மிகவும் காத்திரமானதொரு உரையை நேற்று வழங்கியிருக்கின்றார்.

இந்த திட்டத்தைக்கூட நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் இந்த நாடு சீரழிந்து போவதற்கு காரணகர்த்தாக்களாக நீங்கள் இருப்பீர்கள் என்று அவர் கூறினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு உடன்பாட்டுடன் இந்த நிபுணத்துவ அறிக்கையை கொண்டு வந்திருக்கின்றது.

அதன் மூலமாக இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும், இந்த நாட்டில் சகல மக்களும் சமத்துவத்துடன் வாழ வேண்டும், எங்களுக்கு காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம் கிடைக்க வேண்டும், மற்றைய மாவட்டங்களின் எல்லையை கபளீகரம் செய்வதற்கு எமக்கு விருப்பமில்லை.

எங்களுடைய எல்லைக்குள் எங்களுடைய மக்கள் சுயநிர்ணயத்துடன் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதே எமது விருப்பாகும். பிரிக்கப்படாத நாட்டிற்குள் எமது மக்கள் சுயநிர்ணயத்துடன் சுதந்திரமாக வாழக்கூடிய ஒரு தீர்வை நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அந்த அடிப்படையில்தான் இந்த அரசியல் யாப்புத் திட்டம் கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

நாடாளுமன்றம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுத் தரவேண்டும். மக்கள் தீர்ப்பிற்கு விடுகின்றபோது ஐம்பது வீதமான மக்கள் அதற்கு ஆதரவு தருகின்றபோது தான் அரசியலமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

இதனை அவர்கள் மறுப்பார்களானால் நாடாளுமன்றம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தரவில்லையென்றால் உள்நாட்டு பொறிமுறை எதுவும் சரிவராது. சர்வதேச பொறிமுறைகளினூடாக தான் இனப்பிரச்சினைக்குரிய தீர்வினை காண வேண்டும் என்ற நிர்ப்பந்தம் உருவாகும். சிறுபிள்ளைத்தனமான சில விமர்சனங்கள் இருக்கின்றன.

அதைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை. கடந்த காலத்தில் ஒருவர் எங்களுடைய கட்சியிலிருந்து பாய்ந்துவிட்டார். இப்போது அவருக்கு கிடைத்த அமைச்சும் இல்லாதுபோய்விட்டது என தெரிவித்துள்ளார்.