வடக்கில் பௌத்த மயமாக்கல் நிறுத்தப்பட வேண்டும்! வடக்கின் புதிய ஆளுநர் திடமான பதில்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

தமிழ்ப் பகுதிகளில் பௌத்தமயமாக்கல் அரசியல் நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்டால், அது நிறுத்தப்பட வேண்டும் என வடக்கின் புதிய ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

புதிதாக வடக்கின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள வடக்கின் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் வடக்கின் நிலைமைகள் தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்று கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக தொடர்ந்தும் பேசிய அவர்,

விரைவில் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து இந்த விவகாரம் குறித்துக் கலந்துரையாடவுள்ளேன். இது பௌத்தத்துக்கு எதிரானது. ஜனநாயக விரோதமானது. இத்தகைய செயற்பாடுகளை ஊக்குவிப்போருடன் தீவிரமான கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளேன்.

இந்தச் செயல்களுக்குப் பின்னால் இருப்பவர்களை, மகாநாயக்கர்களின் ஆசியுடன் கண்டுபிடிக்க முடியும் என்று நிச்சயம் நம்புகிறேன். ஒரு தமிழனாக மாத்திரம் இதையிட்டு கவலை கொள்ளவில்லை. ஒரு ஆளுனராக, பௌத்த தத்துவத்தை மதிக்கின்ற ஒருவராகவும், இது சரியானது அல்ல என்று நான் நினைக்கிறேன்.

ஒரு உண்மையான பௌத்தர், எதையும் மீறமாட்டார். எதையும் வைத்திருக்க விரும்பமாட்டார். எதையும் விரிவுபடுத்த விரும்பமாட்டார். எந்தச் சங்கலியையும் அறுக்க விரும்பமாட்டார்.

எனவே தமிழ்ப் பகுதிகளில் பௌத்தமயமாக்கல் அரசியல் நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்டால், அது நிறுத்தப்பட வேண்டும்.

நீண்டகாலம் இராணுவத்தினர் தங்கியுள்ள முகாம்கள் போன்ற சிங்களக் குடியிருப்புகளில், தனிப்பட்ட வழிபாட்டு இடங்களை வைத்திருக்க முடியும். அதனை நாம் நிறுத்த முடியாது என்றார்.