சிதைவடையும் நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு: கருணா ஆரூடம்

Report Print Krishna in அரசியல்

தமிழ் தேசிய கூட்டமைப்பினை நம்பிநம்பி வாக்களித்த நிலையில் அவர்கள் இன்று தங்களது கொள்கையில் இருந்து விலகி சென்றுள்ளதாகவும் மாற்று அரசியலை செய்து வருவதாகவும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கும் போட்டிகள், பொறாமைகள் பிரச்சினைகள் காரணமாக எதிர்காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சிதைவடையும் நிலையுள்ளதாகவும் அவர் எதிர்வுகூறினார்.

மட்டக்களப்பு கல்லடி, நாவற்குடாவில் உள்ள தனியார் விடுதியில் இன்று பிற்பகல் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரியும் ரணிலும் ஒன்றாக நின்றபோது அதற்கு வக்காளத்து வாங்கி தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களித்தது.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரைக் கொண்டுவந்தார்கள். அவர்களின் நான்கு வருட ஆட்சியில் எந்தவித முன்னேற்றமும் தமிழ் மக்களுக்கு ஏற்படவில்லை. தமிழ் மக்கள் பல்வேறு வழிகளிலும் பின்னடைந்த நிலையிலேயே உள்ளனர்.

உரிமை உரிமை என்று கதைத்து எதுவும் இல்லாத நிலையே உள்ளது. ஒவ்வொரு தைப்பொங்கலுக்கும் தீர்வுவரும் என சம்பந்தர் கூறுகின்ற போதிலும் எந்தவித மாற்றங்களும் ஏற்படப்போவதில்லை.

தமிழ் மக்களுக்கு மாற்றம் ஏற்படவேண்டுமானால் தமிழ் தேசிய கூட்டமைப்பு அமைச்சுப் பொறுப்புகளை ஏற்று தமிழ் மக்களுக்கு சேவையாற்றவேண்டும்.

கொள்கை கொள்கை என்று கூறிக்கொண்டு தமிழ் மக்களை மடையர்களாக்கி செயற்பட்டுவருகின்றனர். இதற்கு எதிர்காலத்தில் தமிழ் மக்கள் சிறந்த பதிலடியைகொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றோம். அரசாங்கத்தில் ஏற்றபட்ட மாற்றம் என்பது தமிழ் மக்களுக்கு எந்தவித நன்மையினையும் ஏற்படுத்தப்போவதில்லை.

பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் அரசியலில் ஒரு அரிச்சுவடியாகும். சம்பந்தரை தலைவராக்கியதே நான்தான். அவரை நான் விமர்சிப்பதில் யோகேஸ்வரனுக்கு என்ன பிரச்சினையுள்ளது.

வாகனேரி நீர்பாசனத்திட்டம் பிரிப்பினை நான் அமைச்சராக இருந்தபோது தடுத்து நிறுத்தியிருந்தேன். கல்லடியில் உள்ள நீர்வளங்கள் வடிகாலமைப்புச்சபைக்குரிய காணியை கூட ஹிஸ்புல்லா கைப்பற்ற முனைந்தபோது அதனைக்கூட நான் நிறுத்தியிருந்தேன்.

தற்போது அதுவும் பறிபோகும் நிலையில் உள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதற்கு ஆதரவளிக்கின்றது.

அண்மையில் வாகனேரி பிரிப்பு எதிராக நாங்கள் போராட்டம் நடாத்திக்கொண்டிருந்தபோது அழையா விருந்தாளியாக வந்த யோகேஸ்வரன் முஸ்லிம்களுக்கு வக்காளத்துவாங்கினார்.

அடுத்ததேர்தலில் அவர் அரசியலில் இருக்கப்போதில்லையென்பதுடன் முகவரியில்லாதவராக மாற்றம்பெறுவார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கும்போட்டிகள், பொறாமைகள் பிரச்சினைகள் காரணமாக எதிர்காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சிதைவடையும்.

அந்த இடைவெளியை நிரப்பும் வகையில் பாரிய கட்சியாக எமது கட்சி மாறும். அதற்கான சந்தர்ப்பம் இன்று வந்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களை பாதுகாப்பதற்கு எவரும் இல்லாதநிலையே உள்ளது.

கிழக்கு மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளவர் கடந்த காலத்தில் இனவாதத்தினை கக்கியவர். அவர் ஆளுனராக நியமிக்கப்பட்டதானது தமிழ் மக்கள் மத்தியில் கசப்புணர்வினை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்வரும் 18ஆம் திகதி காந்திபூங்காவில் கையெழுத்துப்போராட்டம் ஒன்றை நடாத்தவுள்ளோம். ஆளுனரை மாற்றவேண்டும் என்ற கோரிக்கையினை ஜனாதிபதியிடம் முன்வைப்பதற்காக பத்தாயிரம் கையெழுத்துகளை பெறும் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளோம்.

இன்று தமிழ் மக்களுக்கு அரசியல்வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. காலம்காலமாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்தநிலையில் இன்று அதன் கொள்கையில் இருந்து விலகி மாற்று அரசியலைசெய்து கொண்டுள்ளது. இதற்கு ஒரு முடிவுகட்டப்பட வேண்டும் என்றார்.

Latest Offers