ஊடகச் சுதந்திரம் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்! சந்திரகுமார் கோரிக்கை

Report Print Suman Suman in அரசியல்

நாட்டில் ஊடகச் சுதந்திரமும், கருத்துச் சுதந்திரமும் உறுதிப்படுத்தப்படல் வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் சில ஊடகங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் கண்டிக்கதக்கதோடு, அவ்வாறான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் இடம்பெறாது இருக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

ஊடகங்களுக்கு இன்று அனுப்பி வைத்துள்ள அறிக்கையொன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவித்துள்ளதாவது,

கடந்தவாரம் தனியார் ஊடக நிறுவனங்களுக்கும் ,ஊடகவியலாளர்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் சில செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன. இது கவலையளிக்கும் விடயமாகும்.

எந்த நாட்டில் ஊடகத்துறைக்கும், ஊடகவியலாளர்களுக்கும் பாதுகாப்பும் ,சுதந்திரமும் வழங்கப்படுகிறதோ அந்த நாட்டில் ஜனநாயகம், பாதுகாக்கப்படுவதோடு, நல்லாட்சியும் உறுதிசெய்யப்படுகிறது.

அத்தோடு மக்கள் நலன் மேம்பாடுகளும் அதிகரிக்கும் அந்த வகையில் ஊடகத்துறையின் பாதுகாப்பையும், சுதந்திரத்தையும் உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமையும் பொறுப்புமாகும்.

நல்லாட்சியில் ஊடகச் சுதந்திரம் குறித்தும் ஊடகவியலாளர்கள் நலன்கள் குறித்தும் அரசு அதிக கவனம் செலுத்தியுள்ளது என அறிவித்தல்கள் மாத்திரமே வெளியாகின்றனவே தவிர செயற்பாடுகள் அவற்றுக்கு எதிராகவே உள்ளன.

ஊடகங்கள் உண்மைக்கு புறம்பாகவோ அல்லது சட்டத்திற்கு மாறாகவோ செயற்படுகின்ற போது சட்டத்தின் உதவியை நாடவேண்டுமே தவிர ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்தும் வகையில் செயற்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இது கண்டிக்கதக்கது எனவும் தெரிவித்துள்ளார்.