தற்போதைய சூழலில் புதிய அரசியலமைப்பு தேவையில்லை! மஹிந்த

Report Print Rakesh in அரசியல்

தற்போதைய சூழலில் புதிய அரசியலமைப்பு தேவையில்லை, அதனை நிறைவேற்ற நாங்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டுக்கு இப்போது இது அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

'புதிய அரசியலமைப்பு நாட்டைப் பிளவுபடுத்தப் போகின்றது என்று கூறி வருகின்றீர்கள். ஆனால், புதிய அரசியலமைப்பில், வடக்கு - கிழக்கு இணைப்பு இல்லை, பௌத்தத்துக்கான முன்னுரிமை தொடர்ந்தும் பேணப்படும், ஒற்றையாட்சியை பாதுகாப்போம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசியலமைப்பு நிர்ணய சபையில் உரையாற்றியிருக்கின்றாரே?' என எழுப்பப்பட்ட கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,

"ரணில் விக்ரமசிங்க இவை எல்லாம் இல்லை என்று சொல்கின்றார். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய அரசியலமைப்பை ஆதரிக்கின்றதே. இவை எதுவும் இல்லாமலா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய அரசியலமைப்பை ஆதரிக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் என்ன முட்டாள்களா? இந்தச் சொற்பதங்கள் வேண்டுமானால் புதிய அரசியலமைப்பில் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அதிகாரங்கள் நாட்டைப் பிளவுபடுத்தும் வகையில் தான் இருக்கின்றன. அதனால் தான் முன்னெச்சரிக்கையாக புதிய அரசியலமைப்பு வேண்டாம் என்று கோருகின்றோம்.

புதிய அரசியலமைப்பில் எதுவும் இல்லை என்றால், அதனை நிறைவேற்றுவதற்கு கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும், சுமந்திரனும் ஏன் துள்ளிக் குதிக்கின்றார்கள். புதிய அரசியலமைப்பை ஆதரிக்குமாறு ஏன் எங்களைக் கோர வேண்டும்?

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் புத்தியை, அவரது தந்திரத்தை நாங்கள் அறிவோம். நாங்கள் நாட்டை வெளிநாடுகளுக்கு தாரைவார்ப்பதாகக் குற்றம் சுமத்தினார். இப்போது அவர்தான் அதனைச் செய்து கொண்டிருக்கின்றார். அவர் வடக்கு - கிழக்கையும் தாரை வார்த்து விடுவார்.

புலம்பெயர் தமிழர்களின் நிகழ்ச்சி நிரலில் தான் சம்பந்தன், சுமந்திரன், ரணில் ஆகியோர் செயற்படுகின்றனர். சர்வதேச சமூகத்தின் பலம் பொருந்திய நாடுகள் இதற்கு ஆதரவு வழங்குகின்றன. அந்த நாடுகள் எவை என்று நாங்கள் சொல்லத் தேவையில்லை. சாதாரண மக்களுக்கே புரிந்த விடயம்.

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசு கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட்டது. அந்த அரசுதான் இப்போது இயங்குகின்றது.

நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசு அமைக்கப்படவேண்டும். அவர்கள் புதிய அரசியலமைப்பை முன்வைக்க வேண்டும். நாங்கள் மூன்று இன மக்களுக்கும் அதிகாரங்களை வழங்க நடவடிக்கை எடுப்போம். இப்போதைய சூழலில் புதிய அரசியலமைப்பு நிறைவேற இடமளிப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.