அரசியலில் பொறுமையாக இருந்து முடிவெடுக்க வேண்டும்! இராதாகிருஸ்ணன்

Report Print Thirumal Thirumal in அரசியல்

பலரும் எனக்கு அமைச்சு பதவி கிடைக்காது எனவும் அதற்கு ஆப்பு வைக்கப்பட்டு விட்டதாகவும் கூறிவந்த போதும் நான் பொறுமையாக இருந்த காரணத்தால் இன்று எனக்கு நல்லதொரு அமைச்சு கிடைத்திருக்கின்றது என அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

எனவே இது எனது பொறுமைக்கு கிடைத்த ஒரு வெற்றியாகும். என்றுமே அரசியலில் பொறுமையாக இருந்து முடிவெடுக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மலையக பகுதிகளில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்திகள் தொடர்பில் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நான் பொறுத்திருந்து பெற்றுக் கொண்டுள்ள அமைச்சானது எங்களுடைய மலையக மக்களுக்கு சேவை செய்ய கூடிய வகையில் அமைந்துள்ளது. இதனையே நான் எதிர்பார்த்தேன். ஏனென்றால் கடந்த காலங்களில் நான் நாடு பூராகவும் சென்று வேலை செய்தேன்.

ஆனால் தற்பொழுது இந்த அமைச்சின் மூலமாக பெருந்தோட்ட பகுதிகளில் பாதை அபிவிருத்தி, பாடசாலை அபிவிருத்தி மற்றும் சுகாதாரம், ஆலயங்களுக்கான அபிவிருத்தி சிறுவர் மகளிர் விவகாரம் தொடர்பான அபிவிருத்தி ஆகியவற்றை முன்னெடுத்து செல்ல முடியும். இதனை முழுமையாக பயன்படுத்தி அபிவிருத்திகளை செய்வேன்.

எனக்கு கிடைத்திருக்கின்ற இந்த அமைச்சின் மூலமாக பெருந்தோட்ட பகுதிகளுக்கும், கிராமங்களுக்கும் நகர் புறங்களுக்கும் அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியும்.

எங்களுடைய மக்கள் இந்த அனைத்து பகுதிகளிலும் வாழ்ந்து வருகின்றார்கள். குறிப்பாக சுகாதாரம், கல்வி மற்றும் பாதை அபிவிருத்தி, ஆலய அபிவிருத்தி மற்றும் சிறுவர் மகளிர் விவகாரம் ஆகிய துறைகளில் நிலவுகின்ற குறைபாடுகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்படும்.

என்னை பொறுத்த வரையில் நான் எந்த ஒரு காலத்திலும் இனம் மதம் எந்த ஒரு வித்தியாசமும் பார்த்தது இல்லை. அதன் காரணமாகவே எனக்கு அனைத்து மக்களும் நுவரெலியா மாவட்டத்தில் வாக்களித்தார்கள்.

நான் கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்த காலத்திலும் எந்த ஒரு வித்தியாசமும் பார்க்காமல் அனைவருக்கும் எனது சேவைகளை வழங்கியுள்ளேன். அது போலவே இந்த அமைச்சின் மூலமாகவும் எனது சேவையை முன்னெடுப்பேன்.

நான் அமைச்சுப் பதவியை மாத்திரம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தால் எப்போதோ அதனை பெற்றுக் கொண்டிருப்பேன்.

ஆனால் எங்களுடைய மக்களுக்கு சேவை செய்யக் கூடிய வகையில் அமைச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற காரணத்தால் நான் பொறுமையாக இருந்தேன்.

அதற்கு ஏற்றவாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க எனக்கு தற்பொழுது விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சு ஒன்றை ஏற்படுத்தி வழங்கியிருக்கின்றார்.

இதன் மூலமாக எங்களுடைய மக்களுக்கான சேவையை முன்னெடுக்க முடியும் என்று நான் எதிர்பாரக்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.