புதிய அரசியலமைப்புக்கு எதிராக சூளுரைக்கும் மகிந்த அணி! போலிப் பிரசாரங்களினால் பயன் இல்லை என்கிறார் ரவி

Report Print Akkash in அரசியல்
89Shares

எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நாடளாவிய ரீதியில் கொண்டு செல்லப்படும் புதிய அரசியலமைப்பிற்கு எதிரான போலிப் பிரசாரங்களில் எந்தவித உண்மையும் கிடையாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரும் மின்வலு, வலுசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கிற்கு முன்பாக இன்றைய தினம் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வு நாளைய தினம் கொண்டாடப்படவுள்ள தைப்பொங்கல் வைபவத்தை முன்னிட்டு மக்களுக்கு உதவும் நோக்கில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

ஆட்சியிலிருந்தபோது செய்யாத இனவாத செயற்பாடுகளை எதிர்கட்சியாகிய பின்னர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சியினர் கூறுவது போன்று அல்லாமல் அனைத்து மக்களிடம் பெற்றுக்கொண்ட கருத்துக்களில் நாட்டிற்குப் பொருத்தமான விடையத்தை உத்தேச அரசியலமைப்பில் முன்வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உத்தேச புதிய அரசியலமைப்பு தொடர்பான வரைபொன்று எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

எனினும், இந்த வரைபை உயிர்த் தியாகம் செய்தேனும் தோற்கடித்துக் காட்டுவதாக எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான தரப்பினர்கள் சூளுரைத்து வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பிற்கு எதிராக இனவாத முத்திரையைப் பொறித்து அதனை நாடு முழுவதிலும் பிரசாரத்திற்கு எடுத்துச் செல்வதையே எதிர்கட்சியினர் செய்தார்கள். அவர்கள் கூறுவதுபோன்று இப்போது முன்வைக்கப்படவில்லை.

அனைவரும் தெரிவித்த கருத்துக்களைக் கொண்டதொரு விடையமே முன்வைக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களுக்கு ஏற்ற கருத்துக்களில் முக்கியமானவை எதுவோ அவற்றை முன்வைப்பதே எமது அபிலாஷையாகும்.

எனவே, இனவாதத்தை ஒருபுறத்தில் வைத்துவிட்டு தேர்தல் மேடைகளில் கூறியவற்றை நடைமுறைப்படுத்தும் காலமே வந்துவிட்டது. எதிர் கட்சிக்குள் எத்தனை பேர் இருக்கிறார்கள். ஆட்சியிலிருந்தபோது செய்யாத ஒன்றை எதிர்கட்சியான பிறகு இனவாதத்தை தூண்டுகின்றனர்.

வேறு எதனையும் அவர்கள் செய்யவில்லை. இந்த நாட்டிற்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்த அனைவரும் இணைந்துகொள்ள வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக ஊடகங்களில் மீண்டும் செய்திகள் வெளியிடப்பட்டு வருவதோடு தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்திலும் இந்த விடையத்தை கோத்தபாய தெரிவித்திருக்கின்றார்.

இதுகுறித்து அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் ஊடகவியலாளர்கள் வினவிய போது அவர் தெரிவித்ததாவது,

ஜனாதிபதி தேர்தலுக்கு தாங்கள் தயார் என்று அனைவராலும் கூறமுடியும். ஊடகவியலாளராகிய நீங்களும் ஜனாதிபதி வேட்பாளராக முடியும் என தெரிவித்துள்ளார்.