பாரிய நிதிமோசடி தொடர்பான வழக்கு விசாரணைகளை மேற்கொள்ளும் இரண்டாவது விசேட மேல் நீதிமன்றம் இரண்டு வாரங்களுக்குள் நிறுவப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
நீதி அமைச்சர் தலதா அத்துகோரல இதனை தெரிவித்துள்ளார்.
பாரிய நிதிமோசடி தொடர்பான வழக்கு விசாரணைகளை முன்னெடுக்க மூன்று நீதிபதிகளைக்கொண்ட விசேட நீதிமன்றங்களை நிறுவும் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர், “விசேட நீதிமன்றுக்கான நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனினும், குறித்த விசேட நீதிமன்றத்தை நிறுவ பொருத்தமான இடம் கிடைக்காதமையே தாமதத்துக்கு பிரதான காரணமாகும்.
நீதிமன்ற சேவை அமைப்பு சட்டமூலத்தின் பிரகாரம் நீதி அமைச்சர் என்றவகையில் எனக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தின் கீழ் இந்த விசேட நீதிமன்ற அமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றேன்.
முதலாவது விசேட நீதிமன்றம் புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டு தற்போது வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
எனினும் இரண்டாவது நீதிமன்றம் அமையவிருக்கும் இடம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை” என அவர் மேலும் கூறியுள்ளார்.