வேண்டும் என்கிறார் சுமந்திரன்! முடியாது என்கிறது அரசாங்கம்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

நாட்டைப் பாதுகாத்த போர் வீரர்களை எந்தவொரு நீதிமன்றத்திலும் நிறுத்துவதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்று நீதியமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

கஹவத்தவில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர்,

நாங்கள் எப்போதும் பௌத்தத்தை மதிக்கிறோம். நாட்டைப் பிளவுபடுத்துவதற்கு எந்தவொரு நல்ல பௌத்தருமோ, அல்லது நாட்டின் எந்தவொரு பகுதியுமோ விரும்பவில்லை.

நாட்டில் நிலவிய மோசமான போரை, தமது வியர்வையையும் இரத்தத்தையும் சிந்தி முடிவுக்கு கொண்டு வந்து நாட்டைப் பாதுகாத்த போர் வீரர்களை எந்தவொரு நீதிமன்றத்துக்கும் கொண்டு செல்வற்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம். இவையெல்லாம் பொய்யான பரப்புரைகள் என்றார்.

முன்னதாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன்,

போர்க்காலத்தில் இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவே பல சந்தர்ப்பங்களில் தான் சர்வதேச விசாரணைக்கு முகங்கொடுக்கத் தயாராக உள்ளேன் எனக் கூறியுள்ளார்.

அவருக்கு அந்தத் தைரியம் உள்ளதென்றால் அரசு ஏன் அஞ்சுகின்றது. இந்த அரசு ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளில் ஏன் இன்னமும் உண்மைகளை கண்டறியவில்லை? கொலை செய்தவர்கள் கைது செய்யப்படவில்லை? சட்டத்தின் முன்நிறுத்தப்படவில்லை.

இந்த அரசு குற்றவாளிகளை தண்டிக்கும் நோக்கத்தில் இல்லை என்பதே உண்மையாகும். தமிழர்கள் என்ற காரணத்தால் அல்லது சிறுபான்மை என்ற காரணத்தால் சட்டம் சுயாதீனமாக செயற்படாது உள்ளமையே பிரச்சினையை ஏற்படுத்துகின்றது.

பிரதான இரண்டு கட்சிகளும் அரசியல் நெருக்கடியில் ஈடுபட்ட போது நீதிமன்றத்தை நாடிய வேளையில் சட்ட சுயாதீனம் பற்றிப் பேசினீர்கள். உங்களின் பிரச்சினையில் சுயாதீனம் பற்றிப் பேசும் நீங்கள் ஏன் தமிழர் விடயத்தில் அதே சுயாதீனம் குறித்துப் பேச மறுக்கின்றீர்கள்.

இதுவே நாமும் சர்வதேசத்தை நாடக் காரணமாகவும் அமைந்துள்ளது. இலங்கையில் அரச தரப்புக்கும் ஆயுதப் படைக்கும் இடையில் நடைபெற்ற போரில் இரண்டு தரப்பும் குற்றம் செய்துள்ளன என்று சர்வதேச நாடுகள் கூறியுள்ளன.

எனவே, குற்றத்தில் ஈடுபட்ட தரப்பு விசாரணை நடத்த முடியாது. அது சுயாதீனம் அல்ல. ஆகவே, சர்வதேச நடுநிலையுடன் விசாரணைகளை நடத்த வேண்டும். உண்மைகளை கண்டறிய வேண்டும்.

குற்றங்கள் இடம்பெற்றுள்ளன என்றால் அது குறித்த உண்மைகளை தெரிவிக்க வெட்கப்பட வேண்டிய அவசியமில்லை, உண்மைகளை மூடிமறைக்கவே வெட்கப்பட வேண்டும்.

இந்த அரசு சட்டத்தையும், நீதியையும், ஜனநாயகத்தையும் நிலைநாட்ட விரும்புகின்றது என்றால் - சர்வதேச நாடுகளுக்கு மத்தியில் தாம் நியாயமான ஆட்சியாளர்கள் என வெளிப்படுத்த வேண்டும் என்றால் போர்க்குற்ற உண்மைகளைக் கண்டறிய சர்வதேச நடுநிலையுடன் விசாரணைகளை நடத்தி காட்ட வேண்டும் என்று உரையாற்றினார்.

இதற்கிடையில், நாட்டை மீட்ட இராணுவத்தினரை சர்வதேசத்தின் முன் நிறுத்த அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று மகிந்த தரப்பினர் குற்றச்சாட்டுக்களை அடுக்கிவருகின்றனர்.

இந்நிலையிலேயே நாட்டைப் பாதுகாத்த போர் வீரர்களை எந்தவொரு நீதிமன்றத்திலும் நிறுத்துவதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்று நீதியமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்திருக்கிறார்.

Latest Offers