கோத்தபாயவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நோக்கில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தனது அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் அமெரிக்காவுக்கு சென்றிருந்த கோத்தபாய அமெரிக்க ராஜாங்க திணைக்களத்திடம் இதற்கான விண்ணப்பத்தை சமர்பித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதேவேளை அமெரிக்கா ராஜாங்க திணைக்களம் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக மனித உரிமை வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இவ்வாறான வழக்கொன்று இருக்கும் நிலையில், கோத்தபாயவுக்கு தனது அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்ய முடியாத நிலைமையும் காணப்படுவதாக தெரியவருகிறது.

மக்கள் தயார் என்றால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தான் தயாராக இருப்பதாக கோத்தபாய ராஜபக்ச அண்மையில் கொழும்பில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

எனினும் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச போட்டியிடுவார் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவோ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவோ இதுவரை தெரிவிக்கவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு தனது மூத்த மகன் நாமல் ராஜபக்சவை எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தும் எண்ணம் இருக்கின்றது.

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியாக பதவிக்கு வந்தால், தனது மகனுக்கு முடிசூட்டும் மகிந்த ராஜபக்சவின் கனவு பலிக்காமல் போய் விடும், இதன் காரணமாகவே, மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்காமல் இருப்பதாகவும் பேசப்படுகின்றது.

மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த சிரேஷ்ட உறுப்பினர்களும் இது தொடர்பில் மிகவும் அமைதி காத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.