முன்னாள் அமைச்சர்கள் இன்னும் உத்தியோகபூர்வ இல்லங்களில்

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்க்கட்சியில் இணைந்த போதிலும் தேசிய அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்த பலர் இதுவரை தமக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்கள் மற்றும் வாகனங்களை அரசாங்கத்திடம் கையளிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளவர்களுக்கு உத்தியோகபூர்வ இல்லங்கள் மற்றும் வாகனங்களை வழங்குவதில் அரசாங்கம் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக கூறப்படுகிறது.

இது சம்பந்தமாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் உத்தியோகபூர்வ இல்லங்களை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பதவிகளில் இருந்து விலகிய பின்னர் மூன்று மாதங்கள் வரை உத்தியோகபூர்வ இல்லங்களை பயன்படுத்த முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நலலாட்சி அரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி விலகிய பின்னர், மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் 51 நாட்கள் ஆட்சியில் இருந்தது.

ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் டிசம்பர் 16 ஆம் திகதி மீண்டும் பிரதமராக பதவியேற்ற பின், புதிய அரசாங்கம் பதவிக்கு வந்து இன்றுடன் ஒரு மாதம் பூர்த்தியாகியுள்ளது.

இதற்கு முன்னர் அரசாங்கத்தின் அமைச்சரவையில் அமைச்சர்களாகவும் ராஜாங்க அமைச்சர்களாகவும் பிரதியமைச்சர்களாகவும் பதவி வகித்தவர்கள் அரசாங்கத்தில் இருந்து விலகிய போதிலும் உத்தியோகபூர்வ இல்லங்களை இதுவரை அரசாங்கத்திடம் கையளிக்கவில்லை. மேலும் சிலர் தமக்கு வழங்கப்பட்ட வாகனங்களை தொடர்ந்தும் பயன்படுத்தி வருகின்றனர்.