தமிழ் மக்களை ஒருபோதும் கைவிட மாட்டேன்! பிரதமர் ரணில் விக்ரமசிங்க

Report Print Murali Murali in அரசியல்

தான் மீண்டும் பிரதமராகக் காரணமாக தமிழ் மக்களுக்கு, என்றும் தான் நன்றியுடையவனாகவே இருப்பேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், தன்னை நம்பும் அவர்களை, தான் ஒருபோதும் கைவிடப் போவதில்லை எனவும் கூறியுள்ளார்.

நாட்டின் சமகால அரசியல் நிலமைகள் தொடர்பில், சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே, பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “புதிய அரசமைப்புக்கு எதிராகக் கூக்குரலிடுபவர்கள் உத்தமர்கள் அல்ல. அவர்கள், இந்த நாட்டை நாசமாக்கி, நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்துள்ளனர்.

இந்நிலையில், குடும்ப ஆட்சிக்காக நாட்டின் பொருளாதாரத்தைச் சீரழித்து, கடந்த காலங்களில் சுகபோக வாழ்க்கையை வாழ்ந்தவர்களின் அச்சுறுத்தல்களுக்கு, ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் அடிபணியாது.

அரசியல் சூழ்ச்சியை முறியடித்து, தான் மீண்டும் பிரதமராவதாக, வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் நம்பினார்கள். அவர்களின் நம்பிக்கை வீண்போகவில்லை.

இந்நாட்டில், மூவின மக்களும் சமவுரிமையுடன் சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் வாழவேண்டுமெனில், தேசிய இனப்பிரச்சினைக்கு, அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். இதை, புதிய அரசமைப்பின் ஊடாகப் பெற்றுக்கொடுக்கவுள்ளேன்.

இதுவே தனது பிரதான கடமையும் கூட தான் மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டதை அடுத்து ஆற்றிய உரையின் போது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியே தீருவேன்.

வாக்குறுதிகளிலிருந்து தான் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை. நாட்டைப் பிளவுபடுத்தாமல், ஒருமித்த நாட்டுக்குள் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை வழங்குவேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.