ரணிலுக்கு தூது அனுப்பிய மைத்திரி! காரணம் என்ன?

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுரைக்கமைய, ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் சட்டத்தரணி ஷிரால் லக்திலக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் ஏற்பட்டிருந்த அரசியல் குழப்பங்கள் ஓரளவுக்கு தணிந்திருந்தாலும், பொருளாதாரத்தில் இலங்கை படுமோசமான நிலையில் இருப்பதாக வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும் என்ற அழுத்தமும் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், பொதுத் தேர்தலையும், ஜனாதிபதித் தேர்தலையும் உடனடியாக நடத்துமாறு கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இன்னொருபுறத்தில் மகிந்த ராஜபக்ச அணியினர் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தவறான வழியில் செல்லாமல் திரும்பவர வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ அல்லது எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவோ எந்தவிதமான கருத்துக்களையும் வெளியிடவில்லை.

இச்சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் சட்டத்தரணி ஷிரால் லக்திலக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அலரிமாளிகையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுரைக்கமைய, சட்டத்தரணி ஷிரால் லக்திலக பிரதமரைச் சந்தித்துள்ளாரெனவும், அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.