ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்! மீண்டும் உறுதிப்படுத்தினார் கோத்தபாய

Report Print Murali Murali in அரசியல்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக தாம் தயாராகவிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மீண்டும் தெரிவித்துள்ளார்.

விஷேட மேல்நீதிமன்றில் முன்னிலையானதன் பின்னர் ஊடகங்களுக்கு இந்த கருத்து வெளியிடும் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன் போது தொடர்ந்தும் பேசிய அவர்,

“தனது அமெரிக்க குடியுரிமை தொடர்பில் எந்த சிக்கல்களும் இல்லை. தாம் விரும்பினால் அதனை கைவிடுவதற்கான இயலுமை தமக்கு இருக்கின்றது. அது தொடர்பில் அமெரிக்கா எந்த நிர்ப்பந்தங்களையும் ஏற்படுத்த முடியாதெனவும்” என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மக்கள் தயார் என்றால் தானும் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாக அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசிய கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்று மீண்டும் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிட போவதாக கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ள போதிலும் அவர் இன்னும் அமெரிக்க குடியுரிமையை கைவிடவும் இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்து விட்டதாக கோத்தபாய ராஜபக்ச இதுவரை கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்களுக்கு அறிவிக்கவில்லை எனவும் அவர் குடியுரிமையை இரத்துச் செய்தால், அதனை முதலில் கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்களுக்கே அறிவிக்க வேண்டும் எனவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers