மைத்திரி - மஹிந்த கூட்டணிக்குள் மோதல்! அதிகாரத்தை கைப்பற்ற இரகசியத் திட்டம்

Report Print Rakesh in அரசியல்

நாம் எதிர்பார்த்த மாதிரி மைத்திரி - மஹிந்த கூட்டணிக்குள் மோதல் வெடித்துள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அணியினர் தனிவழியில் சென்று மீண்டும் ஓர் அரசியல் சூழ்ச்சி ஊடாக அதிகாரத்தைக் கைப்பற்ற இரகசியத் திட்டம் வகுக்கின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

மேற்படி விடயம் தொடர்பான தகவல் வெளியில் கசிந்துள்ளது. எனினும், இந்த அரசியல் சூழ்ச்சியையும் நாம் வெற்றிகரமாக முறியடிப்போம்.

சர்வாதிகார போக்குடைய ராஜபக்ச அணி மீண்டும் ஆட்சிப்பீடம் ஏற நாம் ஒருபோதும் இடமளியோம். அவர்களின் திட்டங்களை முளையிலேயே கிள்ளிவிடுவோம்.

அதிகார வெறி பிடித்தவர்கள் - பதவி ஆசை பிடித்தவர்கள் வெட்கம் இன்றி ஜனநாயகத் தீர்ப்புக்கு முரணாக - குறுக்கு வழியில் - திருட்டுத்தனமாக ஆட்சியை பிடிக்க முயல்வது வழமை. அவர்களுக்கு தோல்வி என்பது சகஜமாகிவிடும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த ஆட்சி, தடைகளை தகர்த்தெறிந்து தொடரும். எமது ஆட்சியை எவரும் இனிமேல் கவிழ்க்க முடியாது.

நாடாளுமன்ற தேர்தலோ அல்லது ஜனாதிபதி தேர்தலோ எந்த தேர்தலையும் அரசமைப்பு விதிமுறைகளுக்கமைய எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கின்றோம்.

அனைத்து தேர்தல்களிலும் நாமே வெற்றிவாகை சூடுவோம். நாட்டு மக்கள் உண்மை நிலையை புரிந்துவிட்டார்கள். அவர்கள் எமது பக்கமே நிற்கின்றார்கள்.

ஒக்டோபர் 26 அரசியல் சூழ்ச்சி மாதிரி மீண்டும் ஓர் அரசியல் சூழ்ச்சி அரங்கேறினால் நாம் மட்டுமல்ல நாட்டு மக்களே அணிதிரண்டு முறியடிப்பார்கள்.

குறித்த அரசியல் சூழ்ச்சியை முறியடித்ததில் நாட்டு மக்களுக்கும் பெரும் பங்கு உண்டு என்றும் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

Latest Offers