மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனமும், அமெரிக்காவின் எச்சரிக்கையும்

Report Print Steephen Steephen in அரசியல்

போர் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கும் ஒருவரை இராணுவத்தின் இரண்டாம் நிலை அதிகாரியாக நியமித்து உள்ளமையானது இலங்கையுடன் முன்னெடுக்கப்படும் பாதுகாப்பு தொடர்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இலங்கையில் போர் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்படும் 58 இராணுவப் படைப் பிரிவின் கட்டளை அதிகாரியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத்தின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டதை உன்னிப்பாக அவதானித்துள்ள அமெரிக்க நாடாளுமன்றத்தின் நிலையியல் குழு, போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை நிறைவேற்றுவது சம்பந்தமாக இலங்கை காட்டும் நேர்மை தன்மை குறித்து பாரதூரமான கேள்வியை எழுப்பியுள்ளது.

போர் குற்றங்களை திட்டமிடுவதில் பிரதான பங்கை நிறைவேற்றியவர் என ஐக்கிய நாடுகள் பெயரிட்டுள்ள சவேந்திர சில்வா, இலங்கை இராணுவத்தின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டமை தனது கவலைக்கு காரணமாகி இருப்பதாகவும் இது அமெரிக்கா மற்றும் இலங்கை இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புகளுக்கு கெடுதியான பாதிப்பை ஏற்படுத்தலாம் எனவும் அமெரிக்காவின் வெளிவிவகாரம் தொடர்பான குழுவின் தலைவர் எலியட் ஹெங்கல் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

போர் குற்றவாளி என நம்பப்படும் ஒருவரை இராணுவத்தின் தலைமை அதிகாரியாக சேவையில் ஈடுபடுத்துவது என்பது போர் குற்றவாளிகளை குற்றத்திற்கான பொறுப்பில் இருந்து விடுவிப்பதும் நேர்மை தன்மையை வெளிப்படுத்தாமல் இருப்பது எப்படி என்பதை எடுத்து காட்டுவதாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் நிதியமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான தூதுக்குழுவினர் அமெரிக்க ராஜதந்திரிகளை சந்தித்துக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் அமெரிக்காவின் வெளிவிவகாரம் தொடர்பான குழுவின் தலைவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இலங்கையின் கடல் பாதுகாப்பை பலப்படுத்த 39 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க எதிர்பார்த்துள்ளதாக அமெரிக்கா கடந்த ஓகஸ்ட் மாதம் அறிவித்திருந்தது.

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா உயர் பதவிக்கு நியமிக்கப்பட்டமையை சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் கடுமையாக விமர்சித்துள்ளன.