மீள் குடியேற்ற அமைச்சால் மன்னார் மாவட்டத்தில் புதிய வீடுகள் அமைப்பு

Report Print Dias Dias in அரசியல்

மீள்குடியேற்ற அமைச்சின் 2019 ஆம் ஆண்டிற்கான வீட்டுத்திட்ட நிகழ்வு உத்தியோக பூர்வமாக மன்னாரில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் மன்னார் நாகதாழ்வு முள்ளிப்பள்ளம் கிராமத்தில் அடிக்கல் நாட்டு விழா இடம்பெற்றுள்ளது. இதன் போது மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மீள் குடியேற்ற அமைச்சால் இந்த வீட்டு திட்டங்கள் கொண்டு வரப்பட்டது.

கடந்த 2017 வீட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்துகிற ஒரு நடவடிக்கை இருந்தும் அதை அமுல் படுத்துவதில் சட்ட சிக்கல், பணப்பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்திற்குள் இழுபறிநிலை தொடர்ந்து கொண்டிருந்தது. குறிப்பாக அந்த வீடுகளை தகர வீடுகளாக அமைப்பதற்கு வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுடன் முன்னைய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது.

தமிழ் தேசிய கூட்டமைப்பினராகிய நாங்கள் அதை ஏற்கவில்லை. ஏனெனில் எமது மக்களுக்கு நிரந்தரமான வீடுகள் வழங்கப்படவேண்டும். அவர்களது பிள்ளைகளும் அந்த வீடுகளை பயன்படுத்த வேண்டிய தேவை இருக்கின்ற காரணத்தால் தகர வீடுகளை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

அதே வகையில் எமது கலாச்சாரத்திற்கு ஏற்ற வகையிலும் அந்த வீடுகள் அமைக்கப்பட வேண்டிய தேவை உள்ளது.

ஏனெனில் வெளிநாட்டு நிறுவனம் வீடுகளை அமைப்பதாக இருந்தால் தங்களுடைய திட்டமிடலுக்கு அமைவாகவே அமைத்து விட்டு போவார்கள். இங்கு நாங்கள் கலாசார ரீதியாக வீடுகள் அமைந்திருக்க வேண்டிய பாரம்பரிய நம்பிக்கை ரீதியாக இன்னும் பல விடயங்கள் அடங்கியிருக்கும்.

ஆகவே தகர வீட்டுத் திட்டங்களை கைவிட்டு எமது மக்களுக்கு ஒரு வீட்டுக்கு பத்து லட்சம் ரூபா வீதம் பணமாக கொடுத்து அவர்களாகவே வீடுகளை கட்டும் விதத்தில் திட்டங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தோம்.

கடந்த சில மாதங்களுக்கு முன் நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களில் ரணில் விக்ரமசிங்க அரசு ஆட்சியமைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் உதவியை கேட்டிருந்தார்கள். அதற்கு நாங்கள் எமக்கு அமைச்சுப் பதவியோ தனிப்பட்ட ரீதியான எந்த சலுகைகளும் தேவை இல்லை, எமது மக்களின் நீண்டகால பிரச்சினை முதல் நடைமுறை பிரச்சினை வரை தெளிவாக பல விடயங்களை எழுத்து மூலம் சமர்ப்பித்திருந்தோம்.

இந்த விடையங்கள் தொடர்பாக கூடுதல் கவனம் எடுக்க வேண்டும். மிக முக்கியமாக வீட்டுத் திட்டம் வடக்கு, கிழக்கில் யுத்தம் நடைபெற்றது. மக்கள் உயிர் உடமைகளை இழந்துள்ளார்கள். பல பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டு பல பிள்ளைகளை அங்கவீனர்களாக்கி பல பிள்ளைகள் சிறைச்சாலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய குடும்பங்களுக்கு உடனடியாக வீட்டுத் திட்டத்தை கொடுக்க வேண்டும் என்ற முன் மொழிவுகளை வைத்தோம்.

தற்பொழுது சித்திரை மாதத்திற்கு முதல் வருகின்ற வரவு செலவுத் திட்டத்திற்கு முன் அவசரமாக குறிப்பிட்ட தொகை வீடுகளை வடக்கு கிழக்கிற்கு ஒதுக்கியிருக்கின்றார்கள். அதன் அடிப்படையில் தற்பொழுது மன்னார் மாவட்டத்தினுடைய மீள்குடியேற்ற அமைச்சினுடைய முதலாவது வீட்டுத்திட்டம் இங்கு ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.

அந்த வகையில் இந்த வீட்டுத் திட்டம் கொண்டு வருவதற்கு நாங்கள் பல வழிகளில் முயற்சி செய்தோம் அதில் வெற்றியும் கண்டுள்ளோம் சித்திரை மாதத்தின் பின்னரும் குறிப்பிட்டளவு வீடுகள் வரும் என்றும் எதிர்பார்க்கின்றோம்.

வீட்டுத்திட்டத்தின் முதல் பயனாளி மிகவும் பொருத்தமானவர் நாகராஜா தேவி கடந்த யுத்தத்தின் போது கணவன் காணாமல் ஆக்கப்பட்டவர் இளம் வயதில் கனவணை இழந்தவர் தனது நான்கு குழந்தைகளுடன் தாய் ,தந்தை இல்லாத மேலும் ஒரு குழந்தையை எடுத்து வளர்த்து வருகிறார். ஐந்து பிள்ளைகளையும் வளர்க்க முடியாமல் சிறுவர் இல்லங்களின் பாதுகாப்பில் வளர்த்து வருகின்றார்.

இதே போல் அவசர தேவை உடைய அனைவருக்கும் வீடுகள் மட்டுமல்லாமல் அனைத்து தேவைகளும் கிடைக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் மன்னார் பிரதேச செயலாளர் திட்டமிடல் பணிப்பாளர், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்தி சங்கத்தினர், கிராம சேவையாளர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.