சுமந்திரனின் கருத்துக்கு என்னால் பதில் சொல்ல முடியாது!

Report Print Thileepan Thileepan in அரசியல்

போர்க்காலத்திலும் கூட எங்களுடைய மக்களின் பிரச்சனைகளை எழுதிய பல ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியா தரணிக்குளம் பாடசாலை மைதானத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

சுமந்திரனின் கருத்துக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. எனினும் போர்க்காலத்திலும் கூட எங்களுடைய மக்களின் பிரச்சனைகளை எழுதிய பல ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

அவர்கள் பல தியாகங்களையும் செய்திருக்கிறார்கள். ஆகவே விமர்சனம் என்பது ஒருவருடைய மனதை புன்படுத்தாத ரீதியில் செய்யப்பட வேண்டும் என்பது என் கருத்து.

ஆனால் விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். விமர்சனங்களின் ஊடாகத்தான் அரசியலிலும், வேறு சில விடயங்களிலும் அதிகளவில் செய்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.

ஆகவே எங்களது போராட்ட காலத்திலே முன்னணி வகித்த பல ஊடகங்கள், அதிலும் குறிப்பாக தமிழ் ஊடகங்களின் செயற்பாடுகள் மற்றும் அவர்களுடைய தியாகங்கள் மறக்க முடியாதது. பல ஊடகவியலாளர்கள் இறந்தும் இருக்கிறார்கள்.

நான் மிகவும் மதிக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு காரணமாக இருந்த தராக்கி சிவராம் மற்றும் யாழ்ப்பாணத்திலும் பல ஊடகவியளாலர்கள் மரணித்திருக்கிறார்கள்.

இவர்களது தியாகங்களும் எங்களது இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கான ஒரு விதையாக அமைந்திருக்கின்றது.

தமிழ் ஊடகங்களின் தியாகங்கள் துணிச்சலான எழுத்துக்களையும் எந்த காலத்திலும் விட்டுக்கொடுக்க முடியாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டுள்ளார்.