மட்டக்களப்பு மாவட்டத்தில் தன்னிச்சையாக செயற்படும் பிரதேச செயலாளர்!

Report Print Dias Dias in அரசியல்

அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் உரிய மரியாதையைக் கொடுக்காமலும், தனக்கு சகல அதிகாரங்களும் இருப்பதாக நினைத்துக் கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் செயற்படுகின்றார் என பொது மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் தான் தோண்றித்தனமாக செயற்படுகின்றார் என பலமுறை குற்றச்சாட்டுக்கள் வெளியாகியிருந்தன.

ஆனாலும், அவர் அக்குற்றச்சாட்டுக்கள் எதையும் கவனத்தில் கொள்ளாமல் தனக்கு அனைத்து அதிகாரங்களும் இருப்பதைப் போன்று செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார் என்கின்றன தகவல்கள்.

இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்ட உழவர் தின நிகழ்வு போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பலாச்சோலை கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள கருணமலைப் பிள்ளையார் ஆலய முன்றலில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இதற்கு மக்கள் பிரதிநிதியான மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் கலந்து கொண்டிருக்கிறார்.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதியை கருத்தில் கொள்ளாத பிரதேச செயலாளர், ஒரு மரியாதைக்கேனும் அவரை வரவேற்கும் சம்பிரதாயத்தைச் செய்யவில்லை.

மாறாக தான் ஒரு மக்கள் பிரதிநிதியாக நினைத்துக் கொண்டு பேசியிருப்பது அங்கிருந்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் அங்கு பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன், “பிரதேசசெயலாளர் எங்களுடன் ஒத்துழைப்பதில்லை.

மக்கள் பிரதிநிதிகளான எங்களை நிகழ்வுகளிற்கு அழைப்பதில்லை. பிரதேசத்தில் உள்ள தவிசாளரை கணக்கிலேயே எடுப்பதில்லை. மாறாக, மக்கள் பிரதிநிதியல்லாத மக்களால் அரசியலில் நிராகரிக்கப் பட்டவர்களுடன் சேர்ந்து வேலை செய்கிறார்.“ என்று குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் பிரதிநிதிகளுக்கு உரிய மரியாதை கொடுக்காமல் தானே மக்கள் பிரதிநிதியாக செயற்படும் எண்ணத்தில் அவர் இருப்பது பெரும் விசனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அத்துடன் மாவட்ட செயலகத்தின் நிகழ்வு போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் இடம் பெற்றதே தவிர போரதீவுப்பற்று பிரதேச செயலாளரின் தலைமையில் இடம் பெற வில்லை.

எனவே அதிதீகளை அழைக்கும் பணி மாவட்ட செயலகத்திற்கு உரியது அதற்கு தவறாக அர்த்தம் கற்பிக்க முனைவது பலருக்கு வியப்பாக மாறியுள்ளது.

எனவே இதனை பெறுப்பு வாய்ந்த அதிகாரிகள் கவனத்தில் எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.