மைத்திரியில் அணியில் இருந்து மஹிந்த அணிக்கு தாவும் கட்சிகள்

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதியின் அண்மைக்கால செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தி அடைந்துள்ள சிறிய கட்சிகள், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் சம்பந்தப்படாத சிறிய கட்சிகளின் தலைவர்களுக்கு ஆளுநர் பதவிகளை வழங்கியமை மற்றும் அண்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளை ஜனாதிபதி கடுமையாக சாடியதை காரணமாக கொண்டு, அந்த முன்னணியில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சிகள் விலக தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவளிப்பதில்லை என இந்த கட்சிகள் தீர்மானித்துள்ளதாகவும் இதனை எழுத்து மற்றும் வாய்மொழி மூலமாக அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன் மேற்படி கட்சிகள் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அணியில் இணைய தீர்மானித்துள்ளதாகவும் பேசப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை விரிவுப்படுத்தி, அதனை செயற்படுத்துமாறு பல முறை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவித்தும், அவர் அதனை கவனத்தில் கொள்ளவில்லை என முன்னணியில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சிகள் கூறியுள்ளன.

இந்நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் தொடர்ந்தும் அரசியலில் ஈடுபட்டால், தமது கட்சிகளுக்கு எதிர்காலம் இருக்காது என சிறிய கட்சிகளின் தலைவர்கள் கருதுவதாக கூறப்படுகிறது.