சிறுபான்மை மக்களின் ஆதரவின்றி ஜனாதிபதித் தேர்தலில் வெல்ல முடியாது: அசாத் சாலி

Report Print Steephen Steephen in அரசியல்

சிறுபான்மை இன மக்கள் வாக்குகள் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

கண்டியில் அஸ்கிரிய மற்றும் மல்வத்து மாநாயக்க தேரர்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

புதிய அரசியலமைப்புச் சட்டம் ஒன்றை கொண்டு வர வேண்டுமாயின் அரசாங்கம் ஒன்று பதவியேற்ற புதிதில் அதனை கொண்டு வர வேண்டும்.

தேர்தல் ஒன்றுக்கு செல்லவிருக்கும் சந்தர்ப்பத்தில் இதனை கொண்டு வரும் போது அனைவரும் பிரச்சினைகள் இருக்கும்.

நல்ல விடயத்தை கொண்டு வந்தாலும் அதனை எதிர்க்கும் நிலைமையே நாட்டில் காணப்படுகிறது. அதுதான் நாட்டின் காணப்படும் இயற்கையான நிலைமை.

மாநாயக்க தேரர்கள் உட்பட மகாசங்கத்தினர் மற்றும் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து தரப்பினரின் ஆதரவுடனேயே புதிய அரசியலமைப்புச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்றே மாநாயக்க தேரர்களும் தெரிவித்தனர்.

இதனிடையே புதிய அரசியலமப்புச் சட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில், தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வெளியிடும் கருத்துக்களால், ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரிய பாதிப்பு ஏற்படும்.

எங்களிடம் கேட்காமல் அரசாங்கம் செல்ல முடியாது, அமைச்சரவையில் தீர்மானங்களை மேற்கொள்ள முடியாது என கூறுவது அச்சுறுத்துவதை போன்றது.

இதனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பாக வெளியிடும் சில கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது.

அதேவேளை ஜனாதிபதித் தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

கோத்தபாய நான் தான் வேட்பாளர் என்கிறார். சமல் தானும் தாயர் என்கிறார். நான் யாரையும் ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடவில்லை என்று மகிந்த கூறுகிறார். அத்துடன் மகிந்த ராஜபக்சவை தவிர வேறு யாரையும் ஆதரிக்க போவதில்லை என வெல்கம கூறுகின்றார்.

இந்த பிரச்சினைகள் அனைத்தையும் எப்படியாவது தீர்த்து கொண்டு பொது வேட்பாளர் ஒருவரே வர வேண்டும். பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டால் மட்டுமே வெல்ல முடியும். இல்லாவிட்டால் முடியாது. இதுதான் நாட்டின் நிலைமை.

ஜனாதிபதித் தேர்தலின் போது சிறுபான்மை மக்களின் வாக்குகளே தீர்மானிக்கும் வாக்குகள் என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும் எனவும் அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.