அரசாங்கம் சிறுபான்மை மக்களின் ஆதரவை இழக்க நேரிடும்! எச்சரிக்கும் அமைச்சர்

Report Print Thirumal Thirumal in அரசியல்

இந்த அரசாங்கம் சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை தொடர்ந்தும் பெற்றுக்கொள்ள வேண்டுமாக இருந்தால் புதிய அரசியல் அமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் ஊடாக மாத்திரமே தொடர்ந்தும் சிறுபான்மை மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியில் இன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“புதிய உத்தேச அரசியல் அமைப்பு திட்டம் நாடாளுமன்றத்திற்கு அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த உத்தேச அரசியல் அமைப்புத் திட்டமானது சிறுபான்மை மக்களுடைய நீண்டகால பிரச்சினைக்குத் தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதனை இனவாத கண் கொண்டு பார்க்கின்ற ஒரு குழுவினர் எம்மத்தியில் இருக்கின்றார்கள். அவர்கள் என்றுமே இனவாதத்தை மாத்திரம் கையில் வைத்துக்கொண்டு இந்த உத்தேச அரசியல் அமைப்பு திட்டத்தை இல்லாது செய்வதற்கு தங்களுடைய செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

இதனை சிறுபான்மை கட்சிகள் என்ற வகையில் நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த நல்லாட்சி அரசாங்கமானது அமைக்கப்பட்ட போது தன்னுடைய தேர்தல் வாக்குறுதியிலே புதிய அரசியல் அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலமாக சிறுபான்மை மக்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதாக கூறியே நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி அமைத்தது.

ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தின் இந்த புதிய அரசியல் அமைப்புக்கு எதிராக இன்று பல்வேறு சக்திகள் செயல்பட்டு வருகின்றது.

அந்த சக்திகளில் செயல்பாடுகளில் கண்டு அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பு திட்டத்தை கொண்டு வருவதில் பின்வாங்குமாக இருந்தால் அது சிறுபான்மை மக்களின் ஆதரவை இழக்க வேண்டிய ஒரு நிலை ஏற்படும்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் ஜனாதிபதியின் வழிகாட்டலோடு புதிய அரசியல் அமைப்பு திட்டத்தை முறையாக நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்து அதனை நிறைவேற்றி அதன் மூலமாக சிறுபான்மை மக்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும் என” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.