புதிய கூட்டணியின் கீழ் பொதுத் தேர்தலில் போட்டி! எதிர்க்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பு

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணைந்து உருவாக்கும் புதிய கூட்டணியின் கீழ் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடும் யோசனைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பு எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் ஏனைய கட்சிகளை இணைத்து கொள்வது தவறில்லை எனவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேறு ஒரு கட்சியின் கீழ் கூட்டணியில் இருப்பது பிரச்சினைக்குரியது எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இந்த சந்தர்ப்பத்தில் தனித்து போட்டியிட வேண்டும் எனவும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது சம்பந்தமான யோசனை ஒன்றை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பு கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாசவிடம் கையளித்துள்ளது.

அடுத்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது கைச்சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பது இந்த அமைப்பின் பிரதான கோரிக்கையாகும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அடையாளத்தை தக்கவைத்து, பண்டாரநாயக்க கொள்கையை பாதுகாத்து செயற்பட வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய தலைமையிடம் அந்த அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

எது எப்படி இருந்த போதிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோர் இணைந்து கூட்டணியை உருவாக்க இணங்கியுள்ளதால், அந்த கூட்டணி எதிர்காலத்தில் உருவாக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஷெயான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ளவர்களே இந்த கூட்டணியை எதிர்ப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஷெயான் சேமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்பட அந்த கட்சியின் பல உறுப்பினர்கள் ஏற்கனவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.